100 நாள் வேலை திட்டம்.. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் நீக்கம்.. மத்திய அரசு
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் 6 லட்சம் பேரின் அட்டைகளை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய புரட்சிகரமான திட்டங்களில் ஒன்று, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப்புற மக்களுக்கு வேலை உறுதி அளிக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டம் மிகவும் முற்போக்கான உலத்தை திரும்பி பார்க்க வைத்த திட்டம் ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

இந்த திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த திட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. கிராம பஞ்சாயத்துகள் தான் வேலை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
18 வயது பூர்த்தியான திறன் சாரா உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய விரும்புவோர் 100 நாள் வேலை திட்டத்தில் இணைந்து பணியாற்ற முடியும். அதற்கு தேவை ஆதார் கார்டு மட்டுமே.. ஆதார் கார்டு மூலம் இணைந்து ஒவ்வொரு மாதமும் கணிசமான வருமானத்தை ஈட்டஅரசே வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 13.16 கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டில் 89 லட்சத்து 70 ஆயிரத்து 166 பேர் பெயன்பெற்று வகிறார்கள்.
100 நாள் வேலை திட்டம் என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் சேருவோருக்கு என்று தனியாக வேலை அட்டை வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், முகவரி உள்பட சுய விவரம், அவர்கள் செய்த அனைத்து வேலைகளின் விவரங்கள், எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள், கூலி போன்ற தகவல்கள் இடம் பெறும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த நிதியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வரையிலான நிலவரப்படி முறையற்ற, போலியான வேலை அட்டை, பணியாற்ற விருப்பமின்மை, கிராம பஞ்சாயத்துக்கு குடும்பம் நிரந்தரமாக குடியேற்றம், பயனாளிகளின் இறப்பு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் 23 லட்சத்து 64 ஆயிரத்து 27 வேலை அட்டைகள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 6 லட்சத்து 19 ஆயிரத்து 310 100 நாள் வேலை அட்டைகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக பீகாரில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 4 அட்டைகளும், சத்தீஷ்காரில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 375 அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல அசாமில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 அட்டைகளும், ஒடிசாவில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 303 100 நாள் வேலை அட்டைகளும், கர்நாடகாவில் 5 ஆயிரத்து 21, புதுச்சேரியில் 282 , வேலை அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதனிடையே மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அதிகரித்தது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையின் படி, தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. அதாவது தமிழகத்திற்கு 8.5 சதவீத உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் ஊதியத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியாணா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.357-ல் இருந்து ரூ.374 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. ராஜஸ்தானில் ரூ.255-ல் இருந்து ரூ.266 ஆகவும், பீகார், ஜார்க்கண்டில் ரூ.228-ல் இருந்து ரூ.245 ஆகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.221-ல் இருந்து ரூ.243 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது. எல்லா மாநிலங்களுக்குமே ஊதியம் அதிகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications