தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்தல்.. ஒரு இடத்திற்கு 6 பேர் போட்டி.. தர்மசங்கடத்தில் சோனியா!
சென்னை: தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஒரே ஒரு இடம் ஒதுக்கப்படவுள்ள நிலையில் அந்த இடத்தை பெற 6 தலைவர்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகிய 3பேரும் திமுகவை சேர்ந்தவர்கள்.
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 3 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். மாநிலங்களவை எம்பி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என சட்டசபை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது.

6 இடங்களில் 4 இடங்களில் திமுக
6 இடங்களில் 4 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் அதிமுகவும் போட்டியிடும். மீதமுள்ள ஒரு இடத்தை பெறுவதற்கு காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. அந்த ஒரு இடம் யாருக்கு என காங்கிரஸில் இப்போதே போட்டா போட்டி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி பூசல் இருப்பது அனைவரும் அறிந்ததே.

கட்சி பதவி
கட்சி பதவி என்றாலும் மக்கள் பிரதிநிதிக்கான பதவி என்றாலும் இவர்களுக்குள் ஒற்றுமையே இல்லாமல் போட்டிகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த ஒரு இடத்தை பிடிக்க 6 பேர் டெல்லி தலைமையிடம் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. அவர்களில் ப சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், கே எஸ் அழகிரி, பெ விஸ்வநாதன், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர்தான் அந்த 6 பேர்.

ப சிதம்பரம்
ப சிதம்பரம் டெல்லியில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை மகாராஷ்டிரா காங்கிரஸிலேயே அதிக போட்டி நிலவுகிறதாம். அதிலும் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவருக்கு அந்த எம்பி பதவியை கொடுக்க வேண்டும் என சிவசேனா தொண்டர்கள் விரும்புகிறார்களாம்.

அதிருப்தி
இதனால் ப சிதம்பரம் மகாராஷ்டிராவிலிருந்து தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. எம்பி ரேஸில் உள்ள 6 பேரில் ப சிதம்பரம் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். அப்படியிருந்தும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை காங்கிரஸ் கோவாவில் குறைந்த இடங்களையே வென்றது. இதனால் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு இவர் மீது ஒரு அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏற்கெனவே தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தார். இதனால் அவர் இந்த மாநிலங்களவை எம்பி பதவியை பெற பெரு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது. அது போல் தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரி தனது 3 ஆண்டு பதவிக்காலத்தில் எம்பி தேர்தல், எம்எல்ஏ தேர்தல்களை சந்தித்து கணிசமானவர்களை வெற்றி பெற வைத்துள்ளார். இதை காரணமாக காட்டி அவர் எம்பி பதவியை பெற முயற்சிக்கிறார்.

ராகுலின் முடிவு என்னவாக இருக்கும்
இவர்களை போல் பெ விஸ்வநாதன் நேரடி நியமன எம்பி பதவி இதுவரை பட்டியலினத்தவருக்கு தமிழக காங்கிரஸ் வரலாற்றில் வழங்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி அந்த பதவியை தனக்கு அளிக்குமாறு கேட்கிறார். இவரை போல் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள சுதர்சன நாச்சியப்பனும் பதவியை பெற முயற்சிக்கிறார். இப்படியாக இந்த 6 பேரும் போட்டி போட்டுக் கொண்டு ராஜ்யசபா எம்பி பதவியை பெற முயற்சிக்கிறார்கள். இந்த 6 பேருக்கும் பதவியை வழங்காமல் புதிதாக வேறு யாருக்காவது நியமன எம்பி பதவியை ராகுல் காந்தி வழங்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications