பைபிள் கண்காட்சியில் ஃபுட் ஷோ.. ஒரே நேரத்தில் 60 பேருக்கு வாந்தி மயக்கம்! தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் தேவாலயத்தில் பைபிள் கண்காட்சி., உணவருந்திய 60 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்காட்சியில் பரிமாறப்பட்ட உணவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள, தருவைகுளம் மீனவ கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் ஆண்டுதோறும் பைபிள் கண்காட்சி நடைபெறுவது. வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பைபிள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் தருவைகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பைபிள் கண்காட்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களது வீடுகளில் தயாரித்த பல்வேறு வகையான உணவுப் பொருட்களை கொண்டு வந்து கண்காட்சியில் வைத்துள்ளனர். அப்போது கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை சிலர் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 60 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தேவாலய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அவர்களில் பலர் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுசுயா, அஸ்வின், அம்பிகா உள்ளிட்ட 7 குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் தருவைகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட பின்னர் ஒரே நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால், உணவு ஒவ்வாமை காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், கண்காட்சியில் பரிமாறப்பட்ட உணவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பைபிள் கண்காட்சியில் உணவருந்திய பலர் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தருவைகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
