பாட்டிலுக்கு ரூ.10.. பழக்கத்தை விடாத டாஸ்மாக் ஊழியர்கள் 67 பேர் ஒரே நாளில் சஸ்பெண்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் திங்கட்கிழமை பேசிய அமைச்சர் விக்னேஷ், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்ந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக பணம் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 67 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு இதர செலவுகளுக்கு அரசே பணம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த 67 ஊழியர்களை இடைநீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
