IPS அருண் உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் வழக்கில் சேர்ப்பு.. ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ட்விஸ்ட்
சென்னை: பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான 'போக்சோ' வழக்கில் இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்பட 2 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவார்கள். இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு:

'ஜெம் கிரானைட்ஸ்' தொழிலதிபரான ஜெம் வீரமணி 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஜெம் வீரமணி மீதான முதல் 'போக்சோ' வழக்கில் சென்னையில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 14 வயது சிறுமி தொடர்பான இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மொத்தம் 720 பக்கங்களாக உள்ளன.
இதில் ஜெம் வீரமணி, அவரது 2 டிரைவர்களான பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் போலீஸ் துறையை சேர்ந்த 7 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 2 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவார்கள். அதில் ஒருவர் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் ஆவார். இன்னொருவரும் உதவி காவல் ஆணையர் ஆவார். இவர்கள் தவிர 2 இன்ஸ்பெக்டர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. காவல்துறையில் பணியாற்றிய இவர்கள் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கின் புகார்களை சரியாக விசாரிக்கவில்லை. பணியை முறையாக செய்யவில்லை. ஜெம் வீரமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி உள்ளதாக கூறி இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜெம் வீரமணி வழக்கில் அலட்சியமாக இருந்ததாக கூறி முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் போலீஸ் கமிஷனராக இருந்த அருண், கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணன், விசாரணை அதிகாரியாக இருந்த உதவி கமிஷனர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் ஜெம் வீரமணியின் 'போக்சோ' வழக்கு மொத்த தமிழகத்தையும் உலுக்கி உள்ளது. 82 வயது நிரம்பிய இவர் தற்போது 'போக்சோ' வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெம் வீரமணி மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், டிரைவர் லாசர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வரை ஜெம் வீரமணி மீது மொத்தம் 8 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாந்தி மீது 3 வழக்குகளும், அவரது கணவர் மகேந்திர சிம்மன் மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
