“அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்”- குண்டை தூக்கி போட்ட ஆதவ் அர்ஜுனா!
சென்னை: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விடுபட்டு தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்கள். 70 சதவீத அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கடந்த 10 நாட்களாக எங்களை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்." என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிளில் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 2 தொகுதிகளிலும் ஆளும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி 72,139 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், தாராபுரத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி தவெக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளதால், தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரும், தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, "1967 மற்றும் 1977 என தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்குப் பிறகு எங்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் 2026ல் மக்களாட்சி ஏற்படுத்த முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நம்பவில்லை. 2026ஆம் ஆண்டு தேர்தலில் 108 தொகுதியில் தவெக வெற்றி பெற்றது. ஜாதி, பண பலம் இல்லாமல் கூட்டணி ஆட்சி உருவாக்கினோம்.
திருமங்கலம் ஃபார்முலா இல்லாமல் மக்கள் அன்பையும் நம்பிக்கையையும் உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் முதல்வர். பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளோம். ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் நாங்கள் இன்று வெற்றி பெற்றுள்ளோம். தேர்தலுக்கு முன்பு 234 தொகுதிகளுக்கும் நாங்கள் செல்ல முடியாமல் இருந்தோம். இப்போது அதே காவல்துறை அனுமதியுடன் ஊர் ஊராக சென்று வந்துள்ளார் முதல்வர்.
அதிமுகவை இப்படி வழிநடத்துகிறார் என எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட கோபத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. அதிமுகவின் வாக்குகளை எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த தேர்தலில் இவர்கள் இரண்டு பேர் மற்றும் பலர் சேர்ந்து தவெகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என முயற்சி செய்தார்கள். இது 50 வருட வரலாற்றில் நடந்ததில்லை.
எடப்பாடி பழனிசாமியின் பொய் பிரச்சாரத்தை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொண்டதால் தவெக இன்று ஒரு வெற்றியை உருவாக்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அதிமுக வலுவிழுந்ததால் 70 சதவீத ஒன்றியச் செயலாளர்கள் கடந்த 10 நாட்களாக எங்களை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.
அதிமுகவின் ஒட்டுமொத்த ஒன்றியம், கிளைக்கிழகம் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். எம்.ஜி.ஆரின் விசுவாசிகளும், ஜெயலலிதாவின் விசுவாசிகளும் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விடுபட்டு தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தவெகவை, எம்.ஜி.ஆர் உருவாக்கிய ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக பார்க்கிறார்கள். எங்களுடைய தலைவர் விஜய்யை ஒரு எம்.ஜி.ஆராக பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவின் அதிமுகவுடைய வாக்கு வங்கி 41% இருந்தது, 2020இல் 20% இருந்தது, இன்றைக்கு 10 சதவீதம் கூட இருக்காது. ஜெயலலிதாவின் உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைந்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் மறைமுகமாக ஒரு கூட்டணியை போட்டிருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தால் தான் இந்த ஓட்டு கூட அவரால் வாங்க முடிந்தது. இரட்டை இலை இல்லையென்றால் ஒரு ஓட்டு கூட வந்திருக்காது.
மக்கள் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இரட்டை இலையை விசிலாக பார்க்கும் பார்வை இந்த தேர்தலில் வர ஆரம்பித்துவிட்டது. அதனால் இனிமேல் திமுகவும் அதிமுகவும் இணையும் வேலை நடக்கும். என்றைக்கு அவர்கள் இருவரும் சேர்கிறார்களோ அப்போது எடப்பாடி பழனிசாமி காணாமல் போய்விடுவார். அந்த நாள் கூடிய விரைவில் நடக்கும்." எனத் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
