சென்னை புழலுக்கு காலையிலேயே பொக்லைனுடன் சென்ற அதிகாரிகள்.. தரைமட்டமான 73 ஆக்கிரமிப்பு வீடுகள்
சென்னை: சென்னையை அடுத்த புழல் எம் ஜி ஆர் நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்திற்கு பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற அரசு அதிகாரிகள், சுமார் நான்கு தெருக்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 73 வீடுகளை அதிரடியாக இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள். இதனை எதிர்த்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் நீர் நிலைகளை ஒட்டிய ஆக்கிரமிப்பில் குடியிருப்போரின் வீடுகளை அரசு அதிரடியாக அகற்றி வருகிறது. குறிப்பாக கடந்த 15 வருடங்களில் புதிதாக யாரையும் அரசு ஆக்கிரமிக்க விடுவதில்லை. அப்படி ஆக்கிரமிப்பது தெரிய வந்தால் உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த வருகிறது. இதேபோல் தான் சென்னை புறநகர் பகுதிகளிலும் மாறி உள்ளது.

ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது அரசு. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகள், கடைகள், கட்டிடங்களை இடித்து தள்ளி அந்த இடங்களை மீட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் எத்தனை வருடம் குடியிருந்தாலும், நீதிமன்றமே சென்றாலும் நிவாரணம் பெற முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் நீதிமன்றங்கள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கே உத்தரவிட்டு வருகின்றன
இந்நிலையில் சென்னையை அடுத்த புழல் எம் ஜி ஆர் நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் இருக்கிறது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிவிட்டார்கள். அந்த வீடுகளில் மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் என்பைதை கண்டுபிடித்த அரசு அதிகாரிகள் வீடுகளை காலி செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் கேட்கவில்லை.
இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.
இந்தநிலையில் புழல் எம் ஜி ஆர் நகர் பகுதிக்கு நேற்று காலை பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். அங்கு ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முயன்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட பொதுமக்கள், பொக்லைன் எந்திரங்களை தடுத்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பார்த்தார்கள்.
அப்போது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 5 பெண்கள் உள்பட 8 பேர் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்கள். உடனே அங்கு பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டார்கள். அதில் ஒரு பெண் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அங்கு கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன், உதவி கமிஷனர் சகாதேவன், சிதம்பரம் முருகேசன் உள்பட 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள், வீடுகளை அகற்ற தங்களுக்கு கால அவகாசம் தரும்படி கேட்டார்கள். ஆனால் அதற்கு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். அதன் பின்னர் அதிகாரிகள் சுமார் 4 தெருக்களை கொண்ட 73 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலுமாக இடித்து அகற்றினார்கள். இதனால் புழல் எம் ஜி ஆர்நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications