8 இடங்கள் கூட்டணிக்கு? காங்கிரஸ், விசிகவுக்கு முதல்வர் விஜய் ஒதுக்கும் மேஜர் துறைகள்? அதிரடி பின்னணி
சென்னை: தமிழகத்தில் 3 நாளில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் முழு வீச்சில் நடக்கப்போகும் சூழலில்.. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் மற்றும் துறைகள் குறித்த இறுதிப் பட்டியல் தற்போது கோட்டையில் முழுமையாக தயாராகி வருகிறது.. விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் கொடுத்த வாக்குறுதியின்படி, த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகளுக்கான இடப் பங்கீட்டு விவரங்கள் தற்போது சென்னை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன..!!
தமிழகத்தில் அடுத்த 3 நாளில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் முழு வீச்சில் நடக்கப்போகிறது.. கடந்த 10-ந் தேதி முதலமைச்சராக ஜோசப் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் மட்டுமே முதல், கட்டமாக பதவியேற்றுக் கொண்டனர்.

தவெக அமைச்சரவை
இந்த நிலையில் தற்போது அமைச்சரவையின் மொத்தமுள்ள காலி இடங்களையும் முழுமையாக நிரப்ப தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.. கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு என்று விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் கொடுத்த வாக்குறுதியின்படி.. இறுதிப் பட்டியல் தற்போது கோட்டையில் முழுமையாக தயாராகி வருகிறது..
இதன் முதல்கட்டமாக கூட்டணி கட்சிகளுக்கான இடப் பங்கீடு மற்றும் முக்கிய துறைகளின் விவரங்கள் தற்போது கோட்டை வட்டாரத்தில் கசிந்துள்ளன.
தவெகவுக்கு அதிமுக ஆதரவு
கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின்பு த.வெ.க.வுக்கு ஆதரவு தந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 முக்கிய அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.. அதேபோல் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்து புதிய அரசுக்கு சட்டசபையில் பெரும் பலம் சேர்த்த எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 5 இடங்கள் வழங்கப்பட உள்ளன.. இதனால் யாருக்கு எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சென்னை அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது..
இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறி விஜய் பக்கம் வந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.. புதிய அமைச்சரவையில் ஒரு முக்கிய இடத்தை உறுதியாகப் பெறுகிறது.
அதாவது மொத்தமுள்ள 34 அமைச்சர் பதவிகளில் ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மட்டும் 26 இடங்கள் கிடைக்கின்றன.. மீதமுள்ள 8 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்குள் முறைப்படி பிரித்து கொடுக்கப்பட உள்ளன.. இதற்கான இறுதிப் பட்டியலை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆளுநர் மாளிகைக்கு முறைப்படி அனுப்பி வைக்க உள்ளார்..
விசிக, காங்கிரஸூக்கு மேஜர் பதவி?
ஒவ்வொரு கட்சிக்குமான துறைகள் ஒதுக்கீடு முழுமையாக முடிந்ததும்.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடக்கும்.. இதற்கான ஆரம்பகட்ட பாதுகாப்பு மற்றும் மேடை ஏற்பாடுகளை பொதுத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கவனித்து வருகிறார்களாம்.
புதிய அமைச்சர்கள் அனைவரும் பொறுப்பேற்ற கையோடு.. ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் உடனடியாக ஆரம்பமாகும் என தெரிகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அடுத்த 3 நாட்களுக்கு விரிவான விவாதங்கள் நடக்கும்.. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு.. இறுதியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் விரிவான பதில் உரை வழங்குவார்.
அதன் பிறகுதான் தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்.. 2026-27-ம் நிதியாண்டிற்கான புதிய பட்ஜெட் சட்டசபையில் முறைப்படி தாக்கல் செய்யப்பட உள்ளது..
பட்ஜெட் கூட்டத்தொடர்
கடந்த ஆட்சிக் காலத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிய இரண்டும்.. இந்த முறை ஒன்றாக சேர்த்து ஒரே கூட்டு பட்ஜெட்டாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விரிவாகத் தொடங்கும்.. எப்படியும் 40 நாட்களுக்கு மேல் இந்த சட்டசபை கூட்டத்தொடர் நீடிக்கும் என்பதால்.. புதிய அமைச்சரவையின் நிர்வாகத் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த அரசியல் களத்தில் நிலவி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications