8வது பே கமிஷன்! அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? வெளியான முக்கிய அப்டேட்
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக்குழு நாடு முழுவதும் தனது ஆலோசனை கூட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான புது அப்டேட் வெளியாகியிருக்கிறது.
ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அலவென்ஸ் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக.. இந்த ஊதியக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று.. ஊழியர் சங்கங்களை சந்தித்து வருகிறது. அடுத்த மாதம் இக்குழு சென்னைக்கு வருகிறது.

சென்னை வரும் பே கமிஷன் குழு
- ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் இக்குழு ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு பயணிக்கிறது.
- செப்.7,8ம் தேதிகளில் சென்னைக்கும், செப்.9ம் தேதி புதுச்சேரிக்கும் இக்குழு பயணிக்கிறது.
- செப்.16-18 வரை சண்டிகருக்கும், அக்.7-8ம் தேதி பெங்களூருக்கும் குழு செல்கிறது.
அறிக்கை தாக்கல்
8வது ஊதியக்குழு கடந்த 2025ம் ஆண்டு நவ.3ம் தேதி அமைக்கப்பட்டது. அரசு விதிகளின்படி, குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை மத்திய அமைச்சரவையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இக்குழு 2027 மே அல்லது ஜூன் மாதம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும். குழு என்ன அறிக்கையை சமர்ப்பிக்கப்போகிறது? ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எவ்வளவு சம்பளம் உயரும்?
சம்பளம் உயர்வு என்பது 'பிட்மென்ட் ஃபாக்டர்' அளவை வைத்துதான் உயர்த்தப்படும். உதாரணத்திற்கு பிட்மென்ட் ஃபாக்டர் அளவு 2 எனில், ஊழியர்களின் சம்பளம் 2 மடங்கு உயரும். ரூ.40,000 சம்பளம் வாங்குபவருக்கு ரூ.80,000 கிடைக்கும். இதற்கு முன்னர் 6வது ஊதியக்குழுவின் பரிந்துரை 1.86ஆகவும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரை 2.57ஆகவும் பிட்மென்ட் ஃபாக்டர் இருந்தது. தற்போது 8வது ஊதியக்குழுவில் பிட்மென்ட் ஃபாக்டர் 3.5ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இதை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளாது. இருப்பினும் குறைந்தபட்சம் 3வரை ஏற்க வாய்ப்பு உண்டு.
நியமன விதிகளில் மாற்றம்
இந்நிலையில் ஊதிய குழுவின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இதற்கென நியமிக்கப்படும் நிபுணத்துவ ஆலோசகர்களின் வழிகாட்டு நெறிமுறைகளில் சில பகுதி மாற்றங்களை ஊதியக்குழு கடந்த ஆக.11ம் தேதி மேற்கொண்டது.
ஊதியக்குழுவின் செயல்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால், இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், துல்லியமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான 8cpc.gov.in பக்கத்தை சரி பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
தனியார் ஊழியர்களின் சம்பளம் உயருமா?
வாய்ப்பே கிடையாது. வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்போது.. மாநில அரசுகளும் வேறு வழியில்லாமல் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும்.
ஆனால், இந்தியாவில் வெறும் 3-6% பேர்தான் அரசு ஊழியர்கள். மீதமிருப்பவர்கள் அனைவரும் தனியார் ஊழியர்கள். இவர்களின் சம்பளம் உயர வாய்ப்பு இல்லை. யோசித்து பாருங்கள்.. வெறும் 6% மக்களிடத்தில் திடீரென லட்சக்கணக்கில் பணம் புழங்கும்போது.. அவர்கள் சிறந்த கல்வியை, வீடு, நிலத்தை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருப்பார்கள். இதனால் நாடு முழுவதும் விலைவாசி அப்படியே டபுளாகும். மறுபுறம் நம்மை போன்ற கோடிக்கணக்கான தனியார் ஊழியர்கள்.. வெறுமென அரசு ஊழியர்களின் வாயை பார்த்து உட்கார்ந்துக்கொண்டிருப்போம்.


Click it and Unblock the Notifications
