3 விஷயங்கள்.. கருணாநிதியின் திட்டத்துக்கு களங்கமா.. முதல்வர் ஸ்டாலினுக்கு 9 யூனியன்கள் வைத்த கோரிக்கை
சென்னை: சென்னையில் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக தற்போது 9 தொழிற்சங்கங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன.
சென்னையில் தற்போது வரை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண பேருந்து, டீலக்ஸ் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர்த்து பெண்களுக்கு என சிறப்பு பேருந்து, நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் செல்வதற்கு சிறிய ரக பேருந்துகளும் மாநகராட்சி சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 625 வழித்தடங்களில் சுமார் 3,436 அரசு பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்து சேவையை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக 500 பேருந்துகள் Gross Cost Contract முறையில் சென்னையில் இயக்கப்படும் என்றும் எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 500 கூடுதலாக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

கடிதம்
இதற்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் மேலெழுந்தன. சிஐடியு தொழிற்சங்கத்தினர் அதிகாலை முதலேயே போக்குவரத்து பணிமனைகளில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். மேலும், தொமுச மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தினர் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது. இதற்கிடையில் பேருந்து போக்குவரத்து தனியார்மயமாக்கப்படாது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். மேலும், "சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்குவதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்யவே ஒப்பந்த புள்ளிகள் கோராப்பட்டன" என்று விளக்கமளித்தார்.

தனியார்மயம்
இந்நிலையில் தற்போது இதனைத் தொடர்ந்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சேர்ந்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளன. அக்கடிதத்தில், "தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துத் துறையில் செயல்பட்டு வந்த பேருந்துகளை கடந்த 1972ம் ஆண்டு போக்குவரத்துக் கழகமாக்கப்பட்டது. தனியார் வசமிருந்த பேருந்துகளையும் 1973 ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கி, போக்குவரத்துக் கழகங்களுடன் இணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சாரும்.

அப்போதைய திமுக தலைவர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2001ம் ஆண்டில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயன்றபோது, தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக வேலை நிறுத்தம் செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி, "மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தனியார் வசம் விடப்படும் பேருந்துகளை மீண்டும் தேசியமயமாக்குவோம்" என்று கூறியதால் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது தங்கள் தலைமையில் ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், பல்வேறு பொருளாதார சிக்கல்கள் இருப்பதை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் 2 ஆண்டுக்கான ஊதிய பலன்களை விட்டுக் கொடுத்து, ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டார்கள்.

கோரிக்கைகள்
எனவே, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரையில் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் திரும்பப்பெறப்படவில்லை. ஆகவே தாங்கள் இதன் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைகள் 321 முதல் 328 வரை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

ஒப்பந்த பணி
மேலும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்களை பணியில் அமர்த்தும் உத்தரவை திரும்பப் பெற்று வழக்கம்போல் நேரடியாக பணி அமர்த்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மட்டுமல்லாது தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி போக்குவரத்துக் கழகங்களில் இயக்குவதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications