தண்ணீரின் விலை 10 மடங்கு உயர்வு... புயல் பாதித்த இடங்களில் அராஜகம்!
சென்னை: புயல் பாதித்த இடங்களில் தண்ணீரின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. இதையடுத்து வங்கக் கடலில் கஜா புயல் உருவானது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த புயல் நேற்று காலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களிலும் நாகை, வேதாரண்யம், புதுவை, காரைக்காலிலும் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

போக்குவரத்து
இந்த சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. வேதாரண்யம் தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

தண்ணீரின்றி
இந்த நிலையில் வேதாரண்யம், நாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உண்ண உணவின்றி, தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் கம்பங்கள் விழுந்ததால் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

வெள்ளநீரில்...
இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு மின்சாரம் கொடுக்கும் சூழல் இல்லாத நிலை உருவாகியுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் குடிநீருக்காக மக்கள் அவதிப்படுவதாலும் ஒரு சிலர் வெள்ளநீரில் நீந்தி வீடுகளுக்கே சென்று குடிநீரை கொடுத்து வருகின்றனர்.

கொள்ளை
20 லிட்டர் கேனின் வழக்கமான விலை ரூ.30 ஆகும். ஆனால் தற்போது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 20 லிட்டர் தண்ணீரின் விலை ரூ.300-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பெரும் கொள்ளையாக உள்ளது.

மனிதாபிமானம்
சென்னையில் 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் கூட பால் விலை லிட்டருக்கு ரூ. 250 வரை விற்கப்பட்டது. அதாவது வெள்ளம் , புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இல்லாமல் வணிக நோக்கில் சிலர் செயல்படுவது வேதனையை தருகிறது. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இதுபோல் சிலர் நடப்பதை எப்போதுதான் மாற்றிக் கொள்ள போகிறார்களோ!












Click it and Unblock the Notifications