ஐடி பெண் ஊழியர்களை ஏற்றி செல்லும் கார்.. அதிகாலையில் சென்னை பள்ளிக்கரணையில் ஏரிக்குள் பாய்ந்தது
சென்னை: ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் கார் ஒன்று சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலாளி ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் இயங்கும் பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் இரவு பணிக்கு வரும் பெண்களுக்கு பணி முடிந்து வீடு வரை அழைத்துச் சென்று விடுவதற்கு வாடகை கார்கள் இயங்கி வருகிறது. ஐடி நிறுவன ஊழியர்களுக்காக இயக்கப்படும் இந்த வாடகை கார்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

அப்படித்தான், வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு வந்த பெண் ஐடி ஊழியர்கள், பணி முடிந்ததும் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்கள்.
இவர்களுடன் காரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌசல் குமார் (27) காவலாளியாகச் சென்றிருக்கிறார். பொதுவாக ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் காவலாளி, காரில் இருந்து இறங்கும் பெண்களை வீடு வரை வந்து விட்டு செல்வார். பாதுகாப்பிற்காக காவலாளி பெண் ஐடி ஊழியர்களுடன் செல்வது வழக்கம் என்பதால் காவலாளி கௌசல்குமாரும் சென்றுள்ளார்-
காரை அரியலூரைச் சேர்ந்த 35 வயதாகும் ராஜசேகர் (35) என்பவர் ஓட்டிச் சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண் ஐடி ஊழியர்களை அவர்கள் வீடுகளில் பத்திரமாக இறக்கி விட்டனர். பின்னர் கார் மீண்டும் சிறுசேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
நள்ளிரவு 2 மணியளவில் பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் சென்று கொண்டு இருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நாராயணபுரம் ஏரியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், இது குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர் இதையடுத்து வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பள்ளிக்கரணை போலீசார், ஏரியில் மூழ்கிய காரை ஜேசிபி இயந்திரம் மூலம் மேலே தூக்கி வந்தனர்.
இதில் கார் ஓட்டிய ராஜசேகர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக காரில் சென்ற பீகாரைச் சேர்ந்த காவலாளி கௌசல் குமார் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கௌசல்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications