காலையில் டிஃபன்; மதியம் சாப்பாடு; சண்டேனா பிரியாணி.. திமுக கவுன்சிலர் தரமான சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை 5 மணிக்கு பூஸ்ட் அல்லது காப்பி. காலை எட்டு மணிக்குச் சுவையான டிஃபன். மதியம் நல்ல சாம்பார் மற்றும் ரசத்துடன் வாழை இலை சாப்பாடு. ஞாயிற்றுக் கிழமை என்றால் சிக்கன் பிரியாணி.

இவை எல்லாம் எந்த ஹோட்டல் மெனு என்று கேட்கிறீர்களா? இவை எல்லாம் ஹோட்டல் மெனு இல்லை. சென்னை திருவொற்றியூர் திமுக கவுன்சிலர் கபிகணேசன், அவரது வார்டு தூய்மைப் பணியாளர்களுக்குத் தினம் வழங்கி வரும் உணவுப் பட்டியல்.

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

பெருநகர சென்னை மாநகராட்சி, 'சென்னை 384' ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. அதனையொட்டி 'தூய்மையான சென்னை' என்ற முழக்கத்தை முன்வைத்து பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், அதற்கு முன்பாகவே சென்னையில் உள்ள திமுக கவுன்சிலர் ஒருவர் அவரது வார்டு தூய்மைப் பணியாளர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்.

இந்த ஐடியா அவருக்கு எப்படி வந்தது? எங்கிருந்து அவர் இதற்கான உத்வேகத்தைப் பெற்றார். பல கேள்விகளோடு பெருநகர சென்னை மாநகராட்சி 12 வார்டு உறுப்பினர் வீ.கவிகணேசனை சந்தித்தோம்.

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

"நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் 1996இல் சென்னை மேயராக இருந்தார். அவர் அந்தப் பதவியிலிருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் மீது ஒரு தனி அக்கறையை ஏற்படுத்தினார். அந்தக் காலத்தில் நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். அதை நான் ஒரு சென்னை பிரஜையாகக் கண்கூடாகவே பார்த்தேன்.

நான் லயோலா கல்லூரிக்குச் செல்லும்போது அவர் அந்தப் பகுதியில் பணிசெய்யும் தூய்மைப் பணியாளர்களை மிகச் சிறப்பாக அரவணைத்துப் பேசிக் கொண்டிருப்பார்.

அந்த நேரத்தில் எக்ஸ்நோரா நிர்மல் குமாரும் அன்றைய மேயர் ஸ்டாலினுடன் இணைந்து சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்த திட்டங்களைக் கொண்டுவந்தார்கள்.

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

இருவரும் சிங்கப்பூருக்குச் சென்று திடக்கழிவு மேலாண்மை பற்றிய பல புதிய தொழில்நுட்பங்களை நேரடியாகப் பார்த்து அதை அப்படியே சென்னையிலும் நடைமுறைப்படுத்தினார்கள்.

அவரால் ஏற்பட்ட விழிப்புணர்வுதான், இன்றைக்கு நான் வார்டு உறுப்பினராகப் பதவிக்கு வந்ததும், இந்தத் தூய்மைப் பணியாளர்கள் மீது தனிக் கவனம் செலுத்தினேன். அவர்கள் தினம் வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிடுவதில்லை என்பதை அறிந்தேன்.

அவர்கள் பணி முடிந்து அசதியோடு சென்று மீண்டும் வீட்டு உணவுத் தயாரித்துச் சாப்பிடுவது என்பது மிகக் கடினமான காரியமாக உள்ளது என்பதை அறிந்தேன். அதை மனதில் வைத்துத்தான் எனது வார்டில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தினமும் உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தேன்" என்கிறார்

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

"பொதுவாகச் சுடுகாட்டில் வேலை பார்ப்பவர்களைக்கூட மக்கள் 'வெட்டியான்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால், அதிலும் மனிதநேயம் பார்த்து அவர்களை 'மயான உதவியாளர்' என்று மாற்றி அழைக்க உத்தரவிட்டார். முன்பு எல்லாம் குப்பை எடுப்பவர்களைக் குப்பைக்காரி அல்லது குப்பைக்காரன் என மக்கள் அழைப்பார்கள். அதில் ஒரு சமூகநீதியை ஏற்படுத்தும் நோக்கில் 'தூய்மைப் பணியாளர்கள்' என்று ஸ்டாலின்தான் மாற்றியது.

அவர்கள் 'நாங்கள் சம்பத்திற்கு வேலை செய்கிறோம்' என்று சொன்னபோது, 'இல்லை, நீங்கள் இந்தச் சமூகத்திற்கு வேலை செய்கிறீர்கள்' என்ற புதிய பார்வையை அவர்தான் முன்வைத்தார்" என்ற அவரிடம் இந்தத்தூய்மைப் பணியாளர்கள் மூன்று வேளை உணவைச் சரியாகச் சாப்பிடுவதில்லை என்பதை எப்போது கண்டறிந்தீர்கள் எனக் கேட்டோம்.

அதற்கு, "நான் தினமும் அவர்களுடன் அலுவலக ரீதியான மீட்டிங்கை நடத்துவேன். அதாவது தினம் 'கேட் மீட்டிங்' நடக்கும். அப்போது அவர்கள் தினமும் காலையில் டீயை பேப்பர் கப்பில் சாப்பிடுவார்கள். அதுவே சுகாதாரம் அற்றது. அதை நான் உணர்ந்தேன்.

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

அதன்பின்னர் காலை சாப்பிட மாட்டார்கள். டீ மட்டும்தான். வண்டியை எடுத்துக் கொண்டு தூய்மைப் பணிக்குச் சென்று விடுவார்கள். காலை 10 மணிக்கு 9 டீ குடித்துவிடுவார்கள். அதையும் நான் உணர்ந்தேன். ஆகவே, அவர்களுக்குச் சரியான சாப்பாடு வசதியைச் செய்து தரவேண்டும் என்று முடிவு செய்தேன். அவர்கள் நமக்காக உழைக்கிறார்கள். அவர்களைக் கவனித்துக் கொள்வது நம் பொறுப்பு. ஆகவேதான் இந்த ஏற்பாடு" என்கிறார்

கவிகணேசனின் கனவு 'நலமான திருவொற்றியூர்'. "இன்று இப்படி ஒரு முழக்கத்தை நான் முன்வைக்கிறேன். அதற்குக் காரணம் முதல்வர் ஸ்டாலின்தான். அவர்தான் சிங்காரச் சென்னை என்ற சொல்லை முதன் முறையாக முன்வைத்தார். அதன் இன்னொரு வெர்ஷன் தான் இந்த முழக்கம்" என்கிறார்.

இந்தத்தூய்மைப் பணியாளர்களுக்குத் தினமும் இவர் கடையிலிருந்து உணவை வரவழைத்துத் தருவதில்லை. அவர் ஏரியாவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு மூலம் இந்தச் சாப்பாட்டைத் தரமான செய்து தருகிறார்.

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

"என் பெயர் ஆர்.கே.டேனியல். கிட்டத்தட்ட 25 வருடமாக வேலை செய்து வருகிறேன். இதற்கு முன்னால் எல்லாம் காலையில் டீ தருவார்கள். சாப்பாடு என்பது எல்லாம் கிடையாது. பல நாள் நாங்கள் சாப்பிடாமல் வேலை செய்து மயக்கம் போட்டு விழுந்திருக்கிறோம். பல பேருக்கு அல்சர் பிரச்சினை இருக்கின்றது. காரணம், சரியாகச் சாப்பிடாததுதான்.

ஆனால், இப்போது அப்படி இல்லை. விடியற் காலை 5 மணிக்கு எல்லாம் எங்களுக்குக் குடிக்கப் பால் வந்துவிடும். எங்களுக்கு எது தேவையோ, டீயோ, பூஸ்ட்டோ, காப்பியோ எதை வேண்டுமானாலும் தருவார்கள். அதைப் போல மதியம் சாம்பார், ரசம். பொரியலுடன் கவுன்சிலர் கவிகணேசன் சாப்பாடும் போடுகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஞாயிற்றுக்கிழமை தோறும் எங்களுக்கு சிக்கன் பிரியாணி போடுகிறார். எங்களுக்குத் திருப்தியான உணவுக் கொடுக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

A DMK councillor has been giving food to the chennai corporation cleaning workers every day

நான் முக்கியமாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்து வருகிறார். அதைப் போல கவின் அண்ணாவும் செய்கிறார்" என்கிறார்

இவரைப் போலவே முருகம்மா என்பவரும் கடந்த 20 ஆண்டுகளாக இதே தூய்மைப் பணியாளர் பணியைச் செய்து வருகிறார். "இதற்கு முன்னால் நாங்கள் பட்டக் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. நாங்களே குப்பையை அள்ளுவோம். அதை ரிக்‌ஷா வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டுபோவோம். நடந்தேதான் போக வேண்டும். வேலையும் செய்துவிட்டு தெருத் தெருவாக நடக்கவும் வேண்டும். அதிலேயே பாதி உடல் போய்விடும்.

ஆனால், இப்போது வண்டி இருக்கிறது. நாங்கள் எடுத்துப் போட்டால் அது தூக்கிக் கொண்டு செல்கிறது. நாங்கள் சுமக்க வேண்டியதில்லை. அதுவே பெரிய நிம்மதி. அப்புறம் மூன்று வேளையும் ஒழுங்கா சாப்பிட முடிகிறது.

முன்பெல்லாம் காலையில் வெறும் டீதான். மதியம் டீயோடு பண் சாப்பிடுவோம். பெரும்பாலும் வீட்டுக்குப் போகும்வரை சாப்பாடு நிரந்தரமில்லை. இன்றைக்கு அந்த நிலையை எல்லாம் எங்கள் கவுன்சிலர் கவிகணேசன் மாற்றிவிட்டார். அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார்.

வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+