மண்வெட்டியால் மகளை வயிற்று பிள்ளையோடு காலி செய்த அப்பா.. கனவிலும் நடக்க கூடாத மனதை உலுக்கும் சம்பவம்
சென்னை: இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் பரவலாக நடந்து வருகின்றன.. குறிப்பாக நகர்ப்புறங்களில் இது அதிகம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.. ஆனால், கிராமப்புறங்களில் குடும்ப எதிர்ப்பு இன்னும் உள்ளது.. அரசு உதவிகள் இருந்தாலும்கூட, சமூக அழுத்தம் இன்னும் தீராத பிரச்சனையாகவே உள்ளது. இது பல உயிர்களையும் காவு வாங்கி விடுகிறது.. இதோ கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ளது இனாம் வீராபூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் இளைஞன் விவேகானந்தன்.. இவர் ஹூப்பள்ளியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்..

காதல் ஜோடி
இதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மான்யா பாட்டீல்.. இவரும் அங்குள்ள தனியார் காலேஜில் படித்து வருபவர்.. இவர்கள் இருவருக்கும் சிறு வயது முதலே அறிமுகம் ஆகியிருந்ததால், கல்லூரி சென்றபோதும் நட்பு தொடர்ந்துள்ளது.. நாளடைவில் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்துள்ளது.
பிறகு காதலர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் போட்டோக்கள், வீடியோக்களை பகிர்ந்தும் காதலை வளர்த்து வந்தனர்.. ஒரு கட்டத்தில் மான்யா வீட்டில், இந்த காதல் விவகாரம் தெரிந்துவிட்டது,
இதனால் தங்கள் மகளை கண்டித்துள்ளனர், அட்வைஸ் தந்துள்ளார்கள்.. அதுமட்டுமல்லாமல், விவேகானந்தன் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்..

சாதி மறுப்பு திருமணம்
இதை கேள்விப்பட்ட விவேகானந்தன், தன்னால் காதலிக்கு தொந்தரவு வரக்கூடாது என்று சொல்லி, அவரிடமிருந்து சற்று விலகி செல்ல முற்பட்டுள்ளார். ஆனால் யாருக்காகவும் தன்னுடைய காதலை இழக்க முடியாது என்றும், தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் திட்டவட்டமாக மான்யா சொல்லிவிட்டார்.
இதையடுத்து, காதலர்கள் இருவருமே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.. இதை கேள்விப்பட்டதுமே மான்யா வீட்டில் மேலும் கொதித்து போனார்கள்.. மான்யா 20 வயது பெண் என்பதால், போலீசார் பெண் வீட்டாரை சமாதானம் செய்து வைத்துள்ளனர்... அப்போதும் இளம் ஜோடிகளுக்கு பீதி அடங்கவில்லை.. தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிந்த காதல் ஜோடி, ஊரை விட்டு வெளியேறி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவேரி மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.
7 மாத கர்ப்பிணி மகள்
தற்போது மான்யா பாட்டீல் 7 மாத கர்ப்பவதி ஆவார்.. திருமணம் முடிந்து மாதங்கள் கடந்துவிட்டதாலும், வயிற்றில் 7 மாத குழந்தை உள்ளதாலும் இனிமேல் தங்களது குடும்பத்தினரால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று நினைத்துள்ளார்..

இதையடுத்து, தம்பதி இருவரும் கடந்த 8ம் தேதி, சொந்த ஊரான இனாம் வீராபூர் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். ஆனால், மகளை பார்த்ததுமே, பெற்றோர் இன்னும் கோபப்பட்டார்கள்.. அவர்கள் மனம் மாறவே இல்லை என்பது அப்போதுதான் மான்யாவுக்கு தெரிந்தது.. போதாக்குறைக்கு உறவினர்களும் மான்யாவின் பெற்றோரிடம், இந்த திருமணத்தை பற்றி பேசி பேசி கொதிப்பை ஏற்படுத்தி கொண்டேயிருந்தனர்.
இரும்பு பைப், ஆயுதங்கள்
இதன் விளைவு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்யாவின் அப்பா பிரகாஷ், தன்னுடைய உறவினர்களுடன் விவேகானந்தனின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்தார்.. அவர்களை பார்த்ததுமே விவேகானந்தன் அங்கிருந்து தப்பி விவசாய நிலத்திற்குள் மறைந்து கொண்டார்..
உடனே அந்த கும்பல், அப்படியானால் விவேகானந்தன் வீட்டில் இருக்கும்போது மீண்டும் வரலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டது.
பிறகு மாலையில் அதே ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளது.. அப்போது, வீட்டில் மான்யா, அவரது மாமனார், மாமியார் என 3 பேர் மட்டுமே இருந்துள்ளனர். இரும்பு பைப், மண்வெட்டியுடன் வீட்டிற்குள் புகுந்த கும்பல், வயதானவர்கள் என்றும் பார்க்காமல் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

மண்வெட்டியால் தாக்கி
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மான்யா, இதை தடுக்க ஓடிவந்தார்.,. அப்போது மான்யாவின் அப்பா, கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரை இரும்பு பைப்பால் தலையில் பலமாக அடித்தார்.. இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார் மான்யா..
அடுத்த சில நிமிடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, வீட்டையே சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது அந்த கும்பல்.. இவர்களின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்கு போராடிய கர்ப்பிணி உட்பட 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், 7 மாத கர்ப்பிணி மான்யா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிறைமாத கர்ப்பிணி
மான்யாவின் மாமனார், மாமியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் அப்பா பிரகாஷ் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. மேலும் தப்பியோடிய நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications