எனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் நிறைய.. ! வாய் திறந்த நடிகை சிம்ரன்.. மோனல் தற்கொலை ஏன்?
சென்னை: நடிகை சிம்ரன் தனது தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்டு இறந்தது தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1997இல் வெளியான 'ஒன்ஸ்மோர்’ மூலம் அறிமுகமானவர் சிம்ரன். இவரது நடனத்திற்காகவே அதிகம் பேசப்பட்டவர். அதன்பிறகு ’நேருக்கு நேர்’. 'துள்ளாத மனமும் துள்ளும்’ என அதிவேக எக்ஸ்பிரஸ் போல திரையுலகில் பல வெற்றிகளைச் சம்பாதித்தார். விஜய்யுடன் இவர் சேர்ந்து நடித்த படங்கள் அதிகம் பேசப்பட்டன. 'ஆள் தோட்ட பூபதி நானடா’ பாடலை இன்றுவரை இவரது ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

அதற்கு இணையாக 'வாரண ஆயிரம்’ , 'கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற படங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும் போது பட வாய்ப்புகளை மறுத்துவிட்டு, குடும்ப வாழ்க்கைக்குச் சென்றார் சிம்ரன். இப்போதும் கூட அவர் அப்படியே தனது தோற்றத்தை அதே அளவுக்குக் கவனித்து வருகிறார். இவருக்கு வயதே ஆகாதா எனப் பலரும் கேட்கும் அளவுக்கு இளமையாக இருக்கிறார். இவரது தங்கை மோனல் கூட நடிகைதான். பலருக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை. அவர் 2002 ஆம் ஆண்டு சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு ஒரு நடன இயக்குநர்தான் காரணம் என சிம்ரன் அப்போது குற்றஞ்சாட்டி இருந்தார்.
இப்போது அவர் தனது தங்கை பற்றியும் திரைத்துறையில் நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றியும் பல விசயங்களை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டில் பேசி இருக்கிறார். சிம்ரன் அளித்துள்ள பேட்டியில், “1994இல் முதன் முதலாக டிடி மெட்ரோவில் ஆங்கரிங் செய்தேன். அப்படித்தான் கேமரா முன்பாக வந்தேன். அப்போது 2500 ரூபாய் செக் கொடுத்தார்கள். அதான் என் முதல் சம்பளம். அதன் பின்பாக தான் சினிமாவுக்கு வந்தேன்” என்று பேசி இருக்கிறார் சிம்ரன்.
அதேபோல சமீபத்தில் மேற்கு வங்கத்தில் மருத்துவ பெண் ஒருவரின் பாலியல் வன்முறை பற்றிய பேசிய சிம்ரன், “சில நேரங்களில் இதைப் போன்ற செய்திகளைப் படிக்கும்போது அளவுக்கு மீறிய கோபம் வரும். ஆனால், சட்டத்தை நாம் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு என்று சட்டம் உள்ளது. அவர்கள் தான் தண்டனை வாங்கி தரவேண்டும்.
ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது என்றால், உடனே அப்போதே என்ன வெளியே சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அது ஒரு கேள்வியா? அது எப்படி உடனே சொல்ல முடியும்? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே நேரம் தேவை இல்லையா? பொறுமையாக நாம் உட்கார்ந்து யோசித்துத்தான் அதற்கு எதிர்வினை புரியமுடியும். அதற்கு அவகாசம் தேவை.
என்னிடம் அப்படி தவறாகப் பேசினால், கேட்டால் 100% உடனடியாக அப்போதே என் எதிர்ப்பை தெரிவித்துவிடுவேன். சின்ன வயதிலிருந்து நான் இந்த மாதிரியான பிரச்சினைகளை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால், என்னால் அதை இப்போது செல்ல முடியாது. வார்த்தைகள் மூலமாக உங்களைப் பலாத்காரம் செய்தாலோ அல்லது நடத்தை மூலம் செய்தாலோ அது எப்படி இருந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும். அமைதி காக்கக் கூடாது. அது தவறு” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சிம்ரன் அவரது தங்கை மோனல் மரணம் பற்றி சில உருக்கமான விசயங்களைப் பேசி இருக்கிறார். அது பற்றி சிம்ரன், “மோனல் எனக்கு மிக நெருக்கமாக இருந்தாள். அவள் என்னைவிட ஸ்டைலான பெண். அவளிடம் இருந்து தான் நான் ஸ்டைலாக எப்படி இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன். அவளை நிறைய காப்பி பண்ணி இருக்கிறேன். அவளை நான் இதுவரை மறக்க முடியாமல்தான் தவிக்கிறேன்.
அப்படி எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்த வடு மனதில் எப்போதும் இருக்கும். தினமும் அவளை நினைத்துப் பார்ப்பேன். அவளை மறக்க முடியாமல் தவித்து இருக்கிறேன். அவள் எடுத்தது எவ்வளவு தவறான முடிவு. பெற்றோராக ஒரு மகளை வளர்க்க எவ்வளவு கஷ்டங்களைப்பட்டு இருப்பார்கள். சகோதர, சகோதரிகள் எப்படித் தவித்து இருப்பார்கள்” என்று பேசி இருக்கிறார் சிம்ரன்.












Click it and Unblock the Notifications