அடுத்த 10 நாட்கள் ரொம்ப முக்கியம்.. மாறும் கட்சி தலைவர்.. தமிழக அரசியலில் நடக்க போகும் ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு அரசியலில் அடுத்த 10 நாட்களுக்கு நிறைய சுவாரசியமான திருப்பங்கள்.. மாற்றங்கள் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. ஒரு உட்கட்சி மோதல்.. ஒரு கட்சி தலைவர் மாற்றம்.. 2 கட்சிகளில் செய்யப்படும் முக்கிய ஒப்பந்தம் என்று பல மாற்றங்கள் நடக்க உள்ளதாம்.
தலைவர் மாற்றம்:
தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் கட்சி ஒன்றில் தலைவர் மாற்றப்பட உள்ளாராம். அதன்படி தேசிய தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் தலைமை மாற்றப்பட உள்ளதாம்.

ஆட்சி பணியாளராக இருந்த அந்த நபர்.. டாக்டர் ஒருவர் மூலம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாம். அந்த டாக்டர் சமீபத்தில் டெல்லிக்கு பயணம் செய்தார். டெல்லியில் முக்கிய மீட்டிங்குகளை முடித்தார். அவரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி.. நீங்க வந்தாதான் கூட்டணி அமையும். கூட்டணி வைக்க போகும் முக்கிய கட்சி உங்களைத்தான் கேட்கிறீர்கள். அதனால் உங்களையே பதவிக்கு கொண்டு வருகிறோம்.. இன்னும் 2 வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு கூட்டணியை.. பெரிய கூட்டணியை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் கட்சி ஒன்றில் தலைவர் மாற்றப்பட உள்ளாராம்.
பாமக மோதல்:
இது போக பாமக மோதல் அடுத்த 2 வாரங்களில் உச்சம் எடுக்கலாம். பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் தான் என்றும் பொதுக்குழுவில் அறிவித்தபடி நியமன கடிதத்தை முகுந்தனிடம் வழங்கிவிட்டேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனால் அவர் முடிவை மாற்ற வாய்ப்புகள் இல்லை.
பாமக இளைஞரணி தலைவர் நியமனத்தில் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இந்த மோதலுக்கு சமாதானம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இன்னும் புகைச்சல் அடங்கவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மோதல் வெடித்த மறுநாள் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பஞ்சாயத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டிருந்தாலும் அது அறிவிப்பாக வெளியாகவில்லை. அப்பா-மகனுக்கிடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், இந்த மோதலுக்கான தொடக்கப் புள்ளி எது ? என்பதுதான் பாமக தொண்டர்களை இன்னமும் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.
அதாவது, பாமகவுக்குள் அன்புமணியை டாக்டர் ராமதாஸ் கொண்டு வந்தபிறகு பாமக இளைஞரணி தலைவர், எம்.பி., மத்திய அமைச்சர், பாமக தலைவர் என அதிகாரமிக்க அனைத்து பொறுப்புகளும் அன்புமணிக்கு கிடைத்தது. அதிகாரமிக்க பொறுப்புகள் இருந்தும், அப்பா ராமதாஸ் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் எதிலும் முரண்படாமலும், மோதல் போக்கு இல்லாமலும் அதனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியவர் அன்புமணி.
அப்படிப்பட்டவர், பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரை டாக்டர் ராமதாஸ் நியமித்ததை கடுமையாக எதிர்த்ததினால்தான் அப்பா-மகன் மோதல் பகிரங்கமாக வெடித்தது. அதுவும், அன்புமணியின் சொந்த அக்காள் மகன் தான் முகுந்தன். சொந்த அக்காள் மகனின் நியமனத்தை அப்பாவே அறிவிக்கிற போது முதன்முறையாக அப்பாவின் முடிவை எதிர்க்கிறார் என்றால், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் முக்கிய விசயம் இருக்கவே செய்கிறது, என்கிறார்கள் பாமகவினர்.
முக்கிய ஒப்பந்தம்:
இது போக அதிமுக, திமுக தங்களின் அரசியல் ஆலோசகர்களுடன் அடுத்த 10 நாட்களில் முக்கிய ஒப்பந்தம் போடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த ராபின் சர்மாவின் Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.
இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். இந்த ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்ட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பிரஷாந்த் கிஷோருடன் இந்த வாரமே அதிமுக அதிகாரபூர்வமாக தேர்தல் பணிக்கான ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications