சென்னை மக்களே.. இசை நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள்.. ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்
சென்னை: சென்னை மக்களே மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்றவர்கள் எனக்கு டிக்கெட் நகலை அனுப்புங்கள் என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈசிஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசைக் கச்சேரி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் விலை ரூ 3000 முதல் ரூ 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை actc events என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தனர். ஆன்லைனில் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே இருக்கைகள் போட்டுவிட்டு லட்சக்கணக்கானோரை விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிக்ழ்ச்சிக்கு வந்தவர்கள் நிற்க கூட முடியாமல் தவித்தனர். சில்வர், கோல்டு, பிளாட்டினம், டயமண்ட் என 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் கொடுக்கப்பட்டு 4 நிறங்களில் டேக் கட்டப்பட்டது. ஆனால் அவர்களால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. இதனால் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர் கடுமையாக அவதிப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டதால் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து வெளியே வந்துவிட்டனர். இன்னும் சிலர் டிக்கெட்டை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு உள்ளே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் பலர் திரும்பி சென்றனர். மதுரை, பெங்களூர், உள்ளிட்ட இடங்களில் இருந்தெல்லாம் வந்த ரசிகர்கள் டிக்கெட் செலவுடன் தங்குமிடம், உணவு, போக்குவரத்துக்கு செலவு செய்தும் நிகழ்ச்சியை காண முடியாத நிலை ஏற்பட்டது.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to [email protected] along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தனர், எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததே ரசிகர்களுக்கு நடந்த இடையூறுக்கு காரணம் என கூறி இதற்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் காவல் துறையினரோ இசை நிகழ்ச்சியில் நடந்த பிரச்சினைகளுக்கு விழா ஏற்பாட்டாளர்களே காரணம். முதல்வரின் கார் கூட சிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பல ஆயிரம், லட்சங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியோர் நிகழ்ச்சியை காண முடியாததால் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: அன்பான சென்னை மக்களே, நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டை வாங்கிவிட்டு சில துரதிருஷ்டவசமாக கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள். தங்களது டிக்கெட் நகலை உங்கள் குறைகளுடன்
[email protected] என்ற இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். எங்கள் குழுவினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications