350 கிலோவில் சிக்கிய தங்கம்..மீனவர் வலையில் விழுந்த அபூர்வ மீன்.. திக்குமுக்காடி போன காசிமேடு மீனவர்
சென்னை: சென்னை காசிமேட்டினைச் சேர்ந்த மீனவர்கள் வலையில் அபூர்வமான மீன் ஒன்று விழுந்துள்ளது. அந்த மீன் 350 கிலோ எடை இருந்தது. இந்த மீனை பார்த்து காசிமேடு மீனவர்கள் மகிழ்ந்து போனார்கள்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் தான் சென்னையில் உள்ள மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம் ஆகும். ஏராளமான மீனவர்கள் மீன் பிடித்து காசிமேடு சந்தையில் விற்பார்கள். சென்னை முழுவதும் விற்கப்படும் மீன்களில் பெரும்பாலானவை காசிமேட்டி பிடிக்கப்பட்டவை தான்.

காசிமேடு மீன் சந்தையில் ஞாயிறு அன்று கூட்டம் மிகமிக அதிகமாக இருக்கும். மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை உடனே அங்கு விற்பனைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அதேநேரம் பல ஆயிரம் டன் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது சில நேரங்களில் அபூர்வமான மீன்கள் வலையில் சிக்கும். அப்படி சிக்கும் மீன்கள் ஆயிரக்கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ கூட விற்பனை ஆகும். அப்படித்தான் சென்னை காசிமேட்டில் மீனவர்களுக்கு கிடைத்துள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் 10 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளார்கள். அப்போது ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 மீனவர்கள் வலையை இழுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள். இதையடுத்து மீனவர்கள் 10 பேரும் சேர்ந்து வலையை இழுக்க முயற்சி செய்துள்ளார்கள்.
கடலுக்கு மேலே வலை வந்தபோது அதில் மிகப்பெரிய சுறா மீன் சிக்கியது தெரிந்தது. பின்னர் காசிமேடு கரைக்கு திரும்பிய மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாவை எடை போட்டதில் 350 கிலோ இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். .












Click it and Unblock the Notifications