சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவானது தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா, தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வாக்குகளை செலுத்தினர். வாக்களிக்க வந்தபோது இவர்கள் ஐந்து பேரிடையே ஒரு ஒற்றுமை இருப்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கமென்ட் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரபல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலரும் காலையிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
துர்கா ஸ்டாலின்: அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா பழனிசாமி உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வாக்காளர்களோடு வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். தான் வாக்களித்ததை விரலில் மையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தவாறு அங்கிருந்து மு.க.ஸ்டாலின் உடன் புறப்பட்டுச் சென்றார்.

ராதா பழனிசாமி: இதே போல சேலம் சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் .அவருடன் அவரது மனைவி ராதா பழனிசாமி மகன், மருமகள் உள்ளிட்டோரும் நடந்து சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தனர். சிரித்த முகத்தோடு எடப்பாடி பழனிச்சாமியும் அவரது மனைவியும் வாக்களித்துவிட்டு பின்பு புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தனர்.

தமிழிசை சௌந்தரராஜன்: இதே போல தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளரும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் முதல் தலைமுறை வாக்காளர்கள் தயக்கமின்றி வாக்களிக்க வேண்டும் என தான் வாக்களித்த புகைப்படத்தோடு பதிவிட்டு இருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: இதேபோல சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன்களான விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன் ஆகியோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். விஜயகாந்த் இல்லாமல் அவர்கள் வாக்களிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

சௌமியா அன்புமணி : தொடர்ந்து தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து பேசியவர் தான் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தனக்கு இந்த வாக்குச்சாவடி வாக்கு உள்ளதால் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு பின்னர் தர்மபுரி செல்வதாக தெரிவித்தார்.

5 பேருக்கும் ஒற்றுமை: இவ்வாறு தமிழக அரசியல் பிரபலங்களும் அவர்களின் மனைவிகளும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட ஐந்து பேரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. 5 பேருமே சிகப்பு நிற சேலை அணிந்து வாக்களிக்க வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சொல்லி வைத்தார் போல அனைவரும் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து வந்து வாக்களித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ஒருவேளை பேசி வைத்துவிட்டு ஒரே சேலையில் வந்து வாக்களித்தார்களா எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications