அசுர வேகம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பூமியில் மர்ம பொருள்! இஸ்ரோ விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கம்
சென்னை: சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒருபகுதி பூமியில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் அதை கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
என்னதான் ரஷ்யாவும், அமெரிக்காவும் நிலவு பயணங்களில் பல்வேறு சாதனைகளை செய்திருந்தாலும், சந்திரயான் 1 விண்கலம்தான் நிலவில் நீர் இருப்பதற்கான மூலக்கூறுகளை ஆய்வு செய்து சொன்னது. அதுவரை நிலவு பயணத்துக்கு பிரேக் விட்டிருந்த உலக நாடுகள் மீண்டும் இந்த பயணங்களை தொடங்கின. அப்படித்தான் சந்திரயான் 3 விண்கலமும் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த வெற்றிக்கு பின்னர் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை முன்வந்திருக்கின்றன. இந்த வெற்றி சர்வதேச அளவில் இஸ்ரோவுக்கு பெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலனை விண்வெளிக்கு கொண்டு சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதி பூமியில் விழுந்திருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
எல்விஎம்3 எம்4 ராக்கெட்தான் சந்திரயான் 3 விண்கலனை விண்வெளிக்கு கொண்டு சென்றது. இந்த ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினுடைய மேல் பகுதி திடீரென பூமியை நோக்கி திரும்பியுள்ளது. சரியாக நேற்று மதியம் 2.42 மணியளவில் இது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து வட பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கிறது.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் பூமியை சுற்றி சுற்றி வந்து, இந்த ஈர்ப்பு விசையை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நோக்கி முன்னேறியது. இப்படி படிப்படியாக முன்னேற உதவியதுதான் ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினுடைய மேல் பகுதி. கடந்த ஜூலை மாதம் 14ம் தேதியன்று சந்திரயான் 3 விண்கலத்தை 133 கிமீ x 35823 கிமீ சுற்றுப்பாதைக்கு உயர்த்தியது இதுதான் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது விண்வெளியில் ஏராளமான குப்பைகள் சேர தொடங்கியுள்ளன. இதனால் பூமியிலிருந்து விண்வெளியை ஆய்வு செய்வது என்பது சவாலான பணியாக மாறியிருக்கிறது. எனவே மேலும் குப்பைகளை தேக்காமல் இருக்க விண்வெளிக்கு செயற்கை கோள்கள், விண்கலன்களை கொண்டு செல்லும் ராக்கெட் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
அப்படியான ராக்கெட் இல்லாத பட்சத்தில், ராக்கெட்களின் உதிரி பாகங்கள் மீண்டும் பூமியில் விழும் வகையில் இருக்க வேண்டும் என புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவேதான் தற்போது அதற்கேற்றார் போல எல்விஎம்3 எம்4 ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பூமியில் வந்து விழுந்திருக்கின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கீழே விழும் பொருளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இதில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். அப்படியான ரிஸ்கைதான் இஸ்ரோ தற்போது எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications