தவெக மாநாட்டில் நடந்து கொண்டே பேச போகும் விஜய்? கால் வலித்தால் ஓய்வு எடுக்க அறையும் தயார்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தொண்டர்களையும் மக்களையும் பார்த்து நடந்து கொண்டே பேச போவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படும் போது ஓய்வெடுப்பதற்காக ஒரு அறையும் மாநாட்டு இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்களும் அவருடைய தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டி வி. சாலை கிராமத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மாநாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போவதுமாக இருக்கிறது. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் நீட் குறித்து பேசிய விஜய்யின் பேச்சு இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்தது.
தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார். இதனால் மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலர் ஆவலுடன் இருக்கிறார்கள். இன்றைய தினம் மாலை 5 மணிக்கு விஜய் மாநாட்டு இடத்திற்கு வருகிறார். அங்கு அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
பிறகு கட்சியின் கொடியை ஏற்றிவிட்டு மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் நடந்து கொண்டே பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது தொண்டர்கள் விஜய்யை நெருங்காத வகையில் இரு புறமும் அகலமான பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.

அவர் சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை பேச போகிறார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கிய போது , அந்த நிகழ்வு நீண்ட நேரம் நடந்ததால் ஒரு கட்டத்தில் விஜய் அங்கிருந்த டேபிளை பிடித்துக் கொண்டு நின்ற காட்சிகள் வைரலானது.
அது போல் இந்த ஆண்டு பரிசு வழங்கும் நிகழ்வானது இரு கட்டங்களாக நடந்தது. விஜய்யின் கால் வலியை கருத்தில் கொண்டு மாநாட்டு நடைபெறும் இடத்தில் விஜய் ஓய்வெடுக்கும் தற்காலிக அறை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 முதல் 6 மணி நேரம் பேசவுள்ள அவர் இடையிடையே அந்த அறையில் சென்று ஓய்வு எடுப்பார் என தெரிகிறது.
விஜய் மாநாட்டுக்கா தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விஜய் நேற்று இரவே வந்துவிட்டார் என்றும் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் அவர் தங்கியிருப்பதாகவும் அந்த வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மாநாட்டு திடலுக்கு செல்வதற்கேற்ப கேரவன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தங்கும் இடத்தில் இருந்து கேரவனில் மாநாட்டுக்கு வருகிறாராம் விஜய். இங்கு வாகனங்களை பார்க்கிங் செய்யவும் இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிப்பறை, மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் மாநாட்டில் நிறுத்தி வைக்கப்படவுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications