மலேசியா டூ சென்னை விமானத்தில் வந்த பெண்ணை சோதனை செய்த சுங்கத் துறையினர்.. தெறித்து ஓடிய சம்பவம்
சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 23 கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகளை இரு கூடைகளுக்குள் வைத்து கடத்தி வந்த பெண் பயணியை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசியா தலைநகர் கோலாம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் மீது சுங்கத் துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த பெண் மலேசியா நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றது தெரியவந்தது.
சுற்றுலா விசாவில் சென்ற அந்த பெண் மலேசியாவிலிருந்து சென்னை வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியின் லக்கேஜுகளை சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பெண் பயணி இரண்டு பிளாஸ்டிக் கூடைகளை பையில் வைத்திருந்தார். அது என்னவென கேட்ட போது எதையோ சொல்லி மழுப்பினார்.
உடனே சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்த கூடைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரு கூடைகளிலுமே சிறியது முதல் பெரியது வரை 23 பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. இதை கண்ட சுங்கத் துறை அதிகாரிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் அங்கிருந்த சிலர் அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அந்த பெண், எல்லா உயிரினங்களை போல் இவையும் ஒரு உயிரினம்தான். இவற்றை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? இதை கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் எல்லாம் எதற்காக தலைத்தெறிக்க ஓடுகிறார்கள் என கூலாக கேட்டார். அதற்கு சுங்கத் துறை அதிகாரிகள், இவையெல்லாம் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள்.
இவற்றை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வர சர்வதேச வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதி வாங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அங்கிருந்து இங்கே கொண்டு வர இந்திய வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதியும் வாங்க வேண்டும். மேலும் இந்த விலங்குகளை எதற்காக கொண்டு வந்துள்ளீர்கள் என்பதற்கான நியாயமான காரணம் தேவை என அதிகாரிகள் கூறினர்.
அதற்கு அந்த பெண் பயணியோ இதற்கெல்லாம் எதற்கு ஆவணங்கள், அனுமதி, என்னிடம் அது போல் எதுவும் இல்லை என மிகவும் அலட்சியமாகவே பதில் அளித்தார். இதையடுத்து இந்த பெண்ணிடம் ஏதோ சட்டவிரோதம் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் அடைத்தனர். பின்னர் இரு கூடைகளில் இருந்த பாம்புகளை பாதுகாப்பாக வைத்திருந்து பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு உயிரினங்கள் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த பாம்புகளை ஆய்வு செய்ததில் இவை எல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காட்டுக்குள் வசிக்கும் கொடிய விஷத்தன்மை கொண்டவை ஆகும் என தெரிவித்தனர். மேலும் இந்த பாம்புகளில் நோய்க் கிருமிகள் பெருமளவுக்கு பரவி கிடக்கும். இவற்றை நம் நாட்டிற்கு அனுமதித்தால் தேவையற்ற நோய்கள் நம்மையும் மற்ற விலங்குகளையும் தாக்கும்.
எனவே இந்த பாம்புகளை மீண்டும் மலேசியாவுக்கே திரும்பி அனுப்பிவிடுமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு வன உயிரின துறை அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதற்கான பணத்தை அந்த பெண்ணிடமே வசூலித்தனர். மேலும் அந்த பெண் பயணியை கைது செய்து இந்த பாம்புகளை எதற்காக கடத்தி வந்தார் என விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் ஒருவர் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளை கொண்டு வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications