A2Bக்கு எதிரா வேலையை தொடங்கிட்டாங்க.. தீபாவளி கவுண்டவுன் என மோசடி விளம்பரம்! மக்களை எச்சரித்த உணவகம்
சென்னை: அடையார் ஆனந்த பவன் உணவகத்தின் பெயரில் தீபாவளி கவுண்டவுன் பரிசுகள் என்று கூறி பகிரப்படும் மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என அதன் நிர்வாகம் விளக்கம் கொடுத்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் முன்னணி உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒன்றான அடையார் ஆனந்த பவனின் உரிமையாளர் சீனிவாச ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் பேட்டி அளித்தார். அதில், முன்பெல்லாம் ஐயர்கள் கை வசம் இருந்த சைவ உணவக தொழிலில் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த A2B உரிமையாளர் சீனிவாச ராஜா, "இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வர முக்கிய காரணம் தந்தை பெரியார். குலத் தொழில் முறையை மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார்.

எந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். காலம் மாறி அரசின் ஆதரவு கிடைத்து வங்கிகள் கடன் கொடுத்தன. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே செய்து வந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்." என்றார். அவரது இந்த பேச்சை கேட்டு வலதுசாரிகள் சமூக வலைதளங்களில் A2B உணகவகத்தை புறக்கணிக்குமாறு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தார்கள். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, விசிக வன்னியரசு, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பல தலைவர்கள் அந்த உணவகத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீபாவளி கவுண்ட்டவுன் (பரிசுகள்) என்று குறிப்பிட்டு A2B பெயரில் விளம்பரம் ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்படி ஒரு திட்டத்தை தாங்கள் அறிவிக்கவில்லை எனவும், அதை நம்பி யாரும் ஏமாந்து விட வேண்டாம் எனவும் அந்த உணவகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அடையார் ஆனந்தபவன் நிறுவனத்திற்கு எதிரான சதியை தொடங்கி விட்டனர்..
— Aravindakshan B R (@RealAravind36) October 25, 2023
போலி தேசபக்தர்கள்
இந்தியாவிற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரானவர்கள் pic.twitter.com/Jpfc2bln1R
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், "அடையார் ஆனந்த பவனின் (A2B) பொது மக்களுக்கும் மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், "தீபாவளி கவுண்ட்டவுன் (பரிசுகள்)" Whats App இல் எங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரையுடன் எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் பாணியில் சிலர் தங்கள் ஆதாயத்துக்காக போலியான மற்றும் மோசடியான ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இது போன்ற மோசடியான சலுகைகளுக்கு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
A2B தங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய சலுகைகளை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறது. இதுபோன்ற மோசடியான சலுகைகளால் பாதிக்கப்படும் எவரும் அதை அவர்களின் விருப்பம் மற்றும் ஆதாயத்தின் பேரில் செய்கிறார்கள். மேலும் எங்களது A2B பாதிக்கப்பட்டவர்களின் எந்த விதமான இழப்புக்கும் எந்த வகையிலும் பொறுப்பாகாது. எங்கள் நிறுவனம் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உரிய வழிகளை தொடங்கியுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications