ஆதார் அட்டை நம்பர் புதுசா வருது.. மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு.. தமிழ்நாடு அரசு குட்நியூஸ்
சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன. இந்த பணிகளை இந்த மாதத்திற்குள்ளேயே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகிறார்கள்.

தனியார் பள்ளிகள்: அரசுப்பள்ளியை தவிர, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை "எமிஸ்" தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கோ, ஆதார் அட்டையே கிடையாது.. அரசு திட்டங்களை பெற வேண்டுமானாலும் சரி, உயர்கல்விக்கான உதவித்தொகை பெற வேண்டுமானாலும்சரி, வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டுமானாலும் சரி, ஆதார் எண்தான் அடிப்படையாக தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்தவும் அவர்களுக்கான விபரங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாகும் .
மாணவர்கள்: அதனால்தான், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை அதாவது பிப்ரவரி 23 முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகளுக்கு ஆதார் பெறுவதற்கு சேவை மையங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில், எல்காட் நிறுவனம் மூலம் நாளைய தினம் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
பள்ளி வளாகம்: "பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பை ELCOT இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, இதனால் நிரந்தர சேர்க்கை மையத்திற்கு பயணிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 23 ஆம் தேதி கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் உங்கள் மாவட்டத்திலும் இதைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், இதற்காக உங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு ஏற்கனவே தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எல்காட் நிறுவனத்தில் 770 பதிவு/அப்டேட்டிங் கிட் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,
சேவை: மாவட்ட நிர்வாகத்தால் திறம்பட அதனை சேவையில் பயன்படுத்தலாம். எல்காட் கிளை மேலாளர்கள் பதிவு ,புதுப்பித்தல் பணியை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து 770 கருவிகளையும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், DBT முறையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
புதுப்பிப்பு: இறுதியாக, ஆதார் பதிவு ,ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் .












Click it and Unblock the Notifications