தட்கலில் ரிசர்வேஷன்.. ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பதில் சிக்கலா? மெயில் அட்ரஸ் தந்த அதிகாரிகள்
சென்னை: ஐஆர்சிடிசி ஆதார் எண் இணைப்பின்போது, சரியான விவரங்களை பதிவிடுங்கள். குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், இ - மெயில் அனுப்பி வைக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.. குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் இ - மெயில் அனுப்பி வைக்கலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்,
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC வெப்சைட்டில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்..
இந்நிலையில், ரயில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC), ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ரயில் முன்பதிவின்போது நேரத்தைப் பொறுத்து, உங்கள் ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாகிறது.

ஆதார் இணைப்பு கட்டாயம்
முறைகேடுகளை தடுக்கவே, இப்படி ஆதார் அட்டை இணைப்பு முறையை ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையானது, கடந்த 28ம் தேதி முதல் அமலில் உள்ளது.. எனவே ஐஆர்சிடிசி பயனாளர்களும் தங்கள் ஆதார் நம்பரை இணைத்து வருகின்றனர்.
ஆனால் ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்கள் ஏற்கனவே ஐஆர்சிடிசி தகவல் பதிவில் உள்ள விவரங்களுடன் வேறுபட்டால் இணைப்பு ஏற்கப்படுவதில்லை. இதன் காரணமாக நிறைய பேரால் ரிசர்வேஷன் செய்ய முடியாமல் போகிறது. ஆதார் நம்பரை இணைத்தாலும், காரணமே இல்லாமல் பயனாளர் கணக்கு முடக்கப்பட்டுவிடுவதாகவும் அதிருப்திகள் கிளம்பின.
முன்பதிவு
இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, உண்மையான பயனாளர்களுக்கு, ரயில்வே டிக்கெட் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், ஐஆர்சிடிசியில் பதிவு செய்துள்ள பயனாளி, தன்னுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்..
அப்படி இணைத்தால், தினமும் முன்பதிவு துவங்கும்போதே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், காலை 10 மணிக்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும். அதேபோல தட்கல் ரிசர்வேஷனுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பது எப்படி
ஒருவேளை ஐஆர்சிடிவி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஏதாவது குறைபாடு காண்பித்தால், [email protected]. என்ற இ-மெயில் முகவரிக்கு, தகவல் அனுப்பலாம்... அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
"My Profile" என்ற பகுதிக்கு சென்று, அங்கே உங்கள் ஆதார் நம்பரை உள்ளிட்டு, கேட்கப்படும் பிற விவரங்களைச் சமர்ப்பித்து, சரிபார்ப்பை (Authentication) உடனடியாக முடித்துவிடலாம்.
பொங்கல் முன்பதிவு டிக்கெட்
இதனிடையே ரயில்வேயில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அமலில் உள்ளது. அந்த வகையில், ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆனால் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
முக்கியமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தவர்களுக்கும், காலை 5 மணி முதலே கவுண்டரில் காத்திருந்த பயணிகள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications