"ஒரு ஓட்டிற்கு ரூ.5000.." மதுராந்தகம் இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது! ஆதவ் அர்ஜுனாவால் பரபரப்பு
சென்னை: ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி அரசியலுக்கு வந்துள்ளதாக விமர்சித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்கள் திமுகவை புறக்கணித்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், திமுக வாக்கிற்கு ரூ.5000 வரை கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக் கொண்டு தவெகவுக்காகவே வாக்களிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, "மு.க. ஸ்டாலின் பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காக அரசியலுக்கு வரக்கூடாது.. எங்களைப்போல் அடிமட்டத்திலிருந்து உழைத்து வர வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு அரசியல் புரியவில்லை. நேரடி வாரிசாக வந்து துணை முதலமைச்சராகி, இப்போது எதிர்க்கட்சி தலைவரானவுடன் நம்மைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார். ஆளுங்கட்சியில் உள்ள எம்எல்ஏ, அமைச்சர்கள் பெயரெல்லாம் தெரியவில்லை என்கிறார்.
நாங்கள் சாமானியர்களாக இருந்து மேலே வந்தவர்கள். 30 கோடி ரூபாய் பணமோ, குடும்பப் பின்னணியோ இல்லாமல், ரூ. 40,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாமானியர்களை எங்கள் தலைவர் விஜய் எம்.எல்.ஏ.-க்களாகவும் அமைச்சர்களாகவும் அமர வைத்துள்ளார். இதைத்தான் 1967-ல் அண்ணா செய்தார்.
எங்களை 'ரீல்ஸ் கட்சி', 'வாட்ஸ்அப் கட்சி' என ஏளனம் செய்தார்கள். ஆனால், எங்கள் தலைவரின் ஒரே முகத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளோம். எங்கள் ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் முதலமைச்சர் குடும்பம், அமைச்சர் குடும்பம், பி.ஏ., மச்சான் என வரிசையாக பர்சன்டேஜ் கட்டிங் போனது; இன்று அது முற்றிலுமாக இல்லை. எங்கள் அமைச்சர்கள் மக்களுடன் மக்களாக வாழ்வதால் பெயர் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எந்த ஊழல் கல்லூரியையும் அவர்கள் கட்டவில்லை.
திமுகவின் இடைத்தேர்தல் அரசியலே ஓட்டுக்கு ரூ. 5,000 கொடுப்பதுதான். எ.வ. வேலு, நேரு போன்றவர்கள் வந்து பூத்துக்கு இவ்வளவு என பணம் இறைப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் முதல்முறையாக 2026 பொதுத்தேர்தலில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல், மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே பெற்று எங்கள் தலைவர் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலிலும் தவெக ஓட்டுக்குக் காசு கொடுக்காது.
மதுராந்தகத்தில் தலித் காலனிகள் மற்றும் வன்னிய மக்கள் வாழும் பகுதிகளில் சாலை இல்லை என மக்கள் கோரிக்கை வைத்தனர். நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நானே இங்கு வந்துவிட்டேன்; உடனடியாக சாலை அமைக்கப்படும். குடிநீர், சாலை, மருத்துவமனை என அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவோம். திமுகவினர் ஓட்டுக்கு ரூ. 5,000 கொடுத்தாலும், அதை தீபாவளி துணி எடுக்கக் கொடுக்கும் பணமாக வாங்கிக்கொண்டு, மக்கள் தவெகவிற்கே வாக்களிப்பார்கள். திமுக இங்கு டெபாசிட் கூட வாங்க முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications
