திமுக We miss you! சீக்கிரம் வாங்க சண்டை போடலாம்! சட்டசபை கடைசி நாளில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிந்துள்ள நிலையில் முதல்வர் விஜய் யாரையும் உருவதேலி செய்யவில்லை என்றும் திமுகவை நாங்கள் மிஸ் செய்கிறோம். சீக்கிரம் வாங்க, சண்டை போடலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது.
இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதங்களும் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் நடந்து முடிந்தன. இந்த ஒரு மாத காலத்தில் அவையில் தவெக, திமுக இடையே பல்வேறு விவகாரங்கள் மோதல் போக்கு இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாள். திமுக குறித்து முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டசபை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து ஒவ்வொரு உறுப்பினராக பேசினர்.
இந்த நிலையில் அவை நடவடிக்கைகள் முடிந்தவுடன் சட்டசபை சபாநாயகரை பாராட்டி நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பேரவைத் தலைவருக்கு மாமன்றம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்லூரியில் Farewell day மாதிரி கூட்டத் தொடரின் கடைசி நாள் என சொல்லும் போதே எங்களுக்கெல்லாம் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. உங்களை விட்டு பிரிந்து போவதற்கு!
நான் நேரு ஸ்டேடியத்தில் தங்கி படித்த போது மெரினா கடற்கரைக்கு சென்று அரசியல் அறிவியல் பாடம் படிப்பேன். அப்போது சைக்கிளில் வெளியே நின்று இந்த சட்டசபைக்குள் நாம் எப்போது போவோம் என்று நினைப்பேன் என அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நான் லயோலா கல்லூரியில் படித்த போது சட்டசபையில் பார்வையாளர் மாடத்தில் நின்று பார்க்க அனுமதி கேட்டேன், அப்போது அங்கிருந்த ஊழியர் என்னை உள்ளே விடவில்லை. உடனே நான், "ஒரு நாள் நான் இங்கு வந்து உட்காரும் போது நீங்கள் பார்ப்பீர்கள்" என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு அது எப்படி சாத்தியமானது என தெரியவில்லை என்றார்.
ஆதவ் தனது பேச்சை தொடர்கையில், 2006- 2011 ஆம் ஆண்டு ஆவுடையப்பன்தான் சபாநாயகர்! அவரது உறவினர்களுடன் நண்பராகி, உள்ளே வந்து மாடத்தில் அமர்ந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவர் காலையிலேயே வந்துவிடுவார்.
அந்த மானியக் கோரிக்கையின் போது நான் குறிப்புகளை எடுத்துக் கொள்வேன். நான் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவன் என்பதால் எனக்கு பாஸ் கொடுத்தார்கள். அப்போது நாமெல்லாம் இந்த சட்டசபைக்கு வர முடியுமா என நினைத்து பார்ப்பேன், எனக்கு அப்பா, அம்மா இல்லை, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன், எந்த பின்புலமும் இல்லை. அப்படிப்பட்ட நம்மில் பலரை முதல்வர் விஜய் எம்எல்ஏக்களாகவும் அமைச்சர்களாகவும் ஆக்கியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் வெளியே வரவில்லை என எப்போதும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பார். ஆனால் இன்று நேரலையில் எதிர்க்கட்சித் தலைவரையும் நாம் காட்டுகிறோம்.
மக்களுக்கான திட்டங்களை எந்த அளவுக்கு படிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவார்கள், அவர்களுக்கு பதில் சொல்ல ஒவ்வொரு கோப்பையும் நாம் படிக்க வேண்டும் என நான் நிறைய கற்றுக் கொண்டேன். எங்களுக்கு பொறுப்புணர்வு உள்ளது. அதற்கு சட்டசபைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
கல்லூரியில் இருந்தே எனக்கு சட்டசபைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை. அதிலும் அரசியலை குறிக்கோளாக கொண்டு 15 வயது முதலே பயணித்தேன்.
அனைத்து உறுப்பினர்களையும் பிரிகிறோம். வருத்தமாக இருக்கிறது. அதிலும் திமுகவை ரொம்ப மிஸ் செய்கிறோம். சீக்கிரம் வாங்க மக்களுக்காக சண்டை போடலாம். முதல்வர் யாரையும் உருவ கேலி செய்யவில்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
