ஆதவ் அர்ஜுனாவின் கருத்து கட்சிக்கே எதிராக இருந்தது.. விசிக தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனம்
சென்னை: விசிகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே அவர் இன்று விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அவர் 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் தான் அவர் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக இன்று அறிவித்தார். இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திருமாவளவன்: ஆதவ் அர்ஜுனா விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறிய திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை என்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட அன்று ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கை தலைமைக்கும் கட்சிக்கும் எதிராக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், எவ்வளவு ஆற்றல் கொண்ட நபராக இருந்தாலும் கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விசிகவில் இருந்து விலகுவது தொடர்பான விளக்கத்தை அவரே அளித்துள்ளார். அவர் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் கட்சியில் வந்து இணைந்தார். அவர் கட்சியில் சேரும் போது.. திமுக உட்பட எந்த கட்சியில் வேண்டுமென்றாலும் என்னால் இணைந்திருக்க முடியும். ஆனால், தலித் மக்களின் நலன்களுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றே என்னிடம் கூறினார். அதன்படியே அவர் கட்சியில் இணைந்தார்.
நியாயமான கோபம்: அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட.. தனது நியாயமான கோபம், மக்கள் நலன் கருதி வெளியிடும் கருத்துக்கள் ஆகியவை இருவருக்கும் இடையே உள்ள உறவைப் பாதிக்கும் வகையிலும் இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என்றுமே கூறியிருக்கிறார். இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அது தொடர்பாகப் பொதுவெளியில் கருத்துச் சொல்வது வழக்கம் இல்லை.. தலைமை அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவர் விளக்கம் அளித்து இருக்கலாம். அதை ஏற்கப்பட்டால் நடவடிக்கை இருந்து இருக்காது. இதுவே அனைத்து கட்சிகளிலும் நடக்கும் நடைமுறை.
கட்சிக்கு எதிரானது: ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அன்றே அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். சஸ்பெண்ட் தொடர்பாக அவர் சொன்ன கருத்து என்பது கட்சிக்கு எதிராகவும் தலைமைக்கு எதிராகவும் இருந்தது. அதில் அவர் சொல்லியிருந்த விளக்கம் அவரது பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு அது ஏற்புடையதாக இல்லை.
அதாவது ஒரு சிஸ்டத்திற்குள் நாம் வரும் போது, அதற்குள் இணைந்து வேலை செய்ய வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும்.. நாம் பேசுவது சரி, நாம் மக்களுக்காகத் தான் பேசுகிறோம் என்றாலும் கூட கட்சி ஒரு கட்டுப்பாட்டை விதித்து, அதற்குள் இருந்து இயங்க வேண்டும் என்பதே முக்கியமானது.
கட்சிக்குள் இருந்து இயங்க வேண்டும்: அவரது கோரிக்கை, குரல் நியமானதாக இருக்கலாம்.. ஆனால், குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி அது செயல்பட வேண்டும். இதைப் பல முறை நாங்கள் அவரிடமே சொல்லி இருக்கிறோம். தனக்கு எது சரி என்பதை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications