கல்வி டிவியில் காவி திருவள்ளுவர்- உலகப் பொதுமறை தந்தவரை இப்படியா செய்வீர்கள்-டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல ஒளிபரப்பானதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் திருவள்ளூவர் காவி நிற உடை அணிந்து இருப்பதைப் போன்ற புகைப்படம் ஒளிபரப்பானது.

இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல.
அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது. வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை.
திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக்கூடாது. எனவே, தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் காவி நிறத்தில் ஒளிபரப்பப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications