வக்பு வாரியச் சொத்துக்களை மீட்டு பள்ளி, கல்லூரிகள் உருவாக்குவேன்... அப்துல் ரஹ்மான் திட்டவட்டம்..!
சென்னை: வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்களை முழுமையாக மீட்டு பள்ளிகள், கல்லூரிகளை உருவாக்குவேன் என கூறியிருக்கிறார் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.
மேலும், 150 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரியச் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..

அறப்பணி
இஸ்லாமிய மத தொடர்பான பணிகளுக்கும், நல்ல நோக்கங்களுக்கும் உதவும் வகையில் வசதி படைத்த இஸ்லாமிய செல்வந்தர்கள் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை வக்பு வாரியத்திற்கு அர்ப்பணித்து வருகிறார்கள். இவற்றின் மூலம் ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட அறப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளதால் வக்பு வாரியத்திற்கென தனி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் நிர்வாகம் நடத்தப்படுகிறது.

நியமனம்
அந்த வகையில் தமிழக வக்பு வாரியத் தலைவராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் ரஹ்மானை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு. இதற்கு முன்னர் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், பதர் சையத் போன்றோர் இப்பதவியை வகித்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக வக்பு வாரியத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ள அப்துல் ரஹ்மான், வக்பு சொத்துக்களை மீட்பதற்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

சொத்து மீட்பு
கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் மதரஸா திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், வக்பு வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்டு அதன் மூலம் மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பள்ளிகள் என கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இவரது இந்த அறிவிப்பு இஸ்லாமிய சமுதாய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆக்கிரமிப்பு
மேலும், 150 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போலி பட்டா மூலம் விற்பனை செய்திருப்பதும், ஆக்கிரமித்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர் அவற்றை முழுமையாக மீட்பதே தனது தலையாய பணி என கூறியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும், வக்பு வாரியம் கணினிமயமாக்கப்படும் எனவும் அப்துல் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.

3,000 பள்ளிவாசல்கள்
தமிழகத்தில் சுமார் 9 ஆயிரம் பள்ளிவாசல்கள் இருப்பதாகவும் அவற்றில் மூன்றாயிரம் பள்ளிவாசல்கள் மட்டுமே வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை பதிவு செய்யாத பள்ளிவாசல்களை விரைந்து பதிவு செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று தன்னிடமோ அல்லது வக்பு வாரிய ஆணையரிடமோ குறைகளை கூறினால் அதற்கு தீர்வு காணப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளார். இவர் கடந்த 2009-2014 காலகட்டத்தில் வேலூர் எம்.பி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications