பதறிய மேயர் பிரியா.. நெருங்கி வந்த அதிமுக கவுன்சிலர்! சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வெடித்த மோதல்
சென்னை: மாநகராட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, மேயர் பிரியாவை நோக்கி முற்றுகையிட அதிமுக கவுன்சிலர் சதீஷ் வந்ததால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று கூடியது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்பட்டது. எனவே அவர்களுக்காக தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், பங்கேற்கவில்லை.

மறுபுறம் கூட்டம் தொடங்கி பின்னர் உரையாற்றிய மேயர் பிரியா, மின்வெட்டால் மக்கள் அவதி அடைவதாகவும், மாற்றம் வேண்டிதான் மக்கள் வாக்களித்தார்கள்.. ஆனால், இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் விமர்சித்திருந்தனர். இந்த கூட்டத்தில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தன. இப்படி இருக்கையில் மேயரை தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் திமுக கவுன்சிலர்கள் பேசினர்.
பின்னர் அதிமுக கவுன்சிலர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர் சதீஷ், தனக்கு முன்னாள் பேசிய கவுன்சிலர்கள் பலர், அவர்களுடைய தலைவர்களை புகழ்ந்து பேசுவதிலேயே அதிக நேரத்தை செலவிட்டதாகவும், ஆனால் நான் அப்படி கிடையாது.. எனது வார்டு மக்களுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்துதான் பேச இருக்கிறேன் என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திமுக கவுன்சிலர்கள், உங்களுக்குதான் தலைவரே கிடையாதே என்று கூற.. டென்ஷன் ஆன கவுன்சிலர் சதீஷ் திடீரென மேயர் இருக்கையை நோக்கி சென்றார். உடனே திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரள.. மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. பின்னர் மேயர் பிரியா தலையிட்டு, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications