தவெக எம்எல்ஏ அருள்.. ஆட்சியருக்கு தவறாக மெசேஜ் அனுப்பியது எப்போ தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தூய்மையான மற்றும் நேர்மையான அரசியலை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே நிறைவடைந்துள்ள. ஆனால், ஆட்சி அமைத்த வெறும் நான்கு மாதங்களிலேயே, அதாவது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆபாசமான வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மக்கள் அளித்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதா?
தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, ஒரு மாவட்டத்தின் உயரதிகாரியான பெண் கலெக்டருக்கே இத்தகைய தொந்தரவு கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
விழுப்புரம் சரக டிஐஜி ஏ. அருளரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே கலெக்டரிடம் எம்.எல்.ஏ தவறாக நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மூத்த அமைச்சர்கள் தரப்பில் அவருக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய ஒரு எம்.எல்.ஏ, தனது பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கேள்வியும், விசாரணை கோரிக்கையும்
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள திமுக MP கனிமொழி கருணாநிதி, "தவெக ஆட்சியில் ஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது" எனக் கடுமையாகச் சாடியுள்ளார். அதேபோல், ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் செல்போனைப் பறிமுதல் செய்து, கடந்த சில மாதங்களாக அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆய்வு செய்ய சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் இந்த விவகாரம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். "தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மாவட்ட ஆட்சியர்கள் பெண்களாக உள்ளனர். இது பெண்களின் நிர்வாகத் திறன் மீது முதல்வர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆனால், இதுபோன்ற இழிவான செயல்கள் ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுக்கும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
தனக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அனைத்துப் புகார்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து மக்களின் நம்பிக்கையால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அரசு அதிகாரிகள் மீது நான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் உள்ள ரியல் எஸ்டேட் முறைகேடுகளைத் நான் அம்பலப்படுத்தியதாலேயே, எதிர்க்கட்சிகள் என் மீது மலிவான அரசியல் செய்கின்றன" என்று அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கலெக்டர் பங்களாவில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் சிசிடிவி கேமராக்களும் உள்ள நிலையில், அங்கு அத்துமீறி நுழைவது சாத்தியமில்லை என்றும், எந்தப் பரிசோதனைக்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஒருபுறம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீதான புகார், மறுபுறம் துறையூர் எம்.எல்.ஏ-வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் கட்சித் தொண்டரைத் தாக்கிய விவகாரம் என ஆட்சி அமைந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே அடுத்தடுத்து எழும் சர்ச்சைகள் முதல்வர் விஜய்க்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அனைத்து தவெக எம்.எல்.ஏ-க்களையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அதிகார துஷ்பிரயோகத்திலோ அல்லது தவறான நடவடிக்கைகளிலோ ஈடுபடும் எம்.எல்.ஏ-க்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஒரு கட்சியின் பிரதிநிதிகள், பதவியேற்ற சில மாதங்களிலேயே இத்தகைய சர்ச்சைகளில் சிக்குவது பொதுமக்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
