Accenture Layoff: 11 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறித்த ஐடி நிறுவனம்.. AI வைத்த பெரிய ஆப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் கடந்த 3 மாதத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் இந்த நடவடிக்கையை அக்சென்ச்சர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் ஏஐ தான் உள்ளது. மேலும் ஊழியர்கள் தங்களின் திறமையை வளர்த்து கொள்ளாவிட்டால் இன்னும் பணியில் இருந்து ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
AI எனும் செயற்கை நுண்ணறிவு வந்தது முதல் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஐடி நிறுவனங்களில் ஏஐ-வை காரணம் காட்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

டிசிஎஸ், மைக்ரோசாப்ட், கூகுள், விப்ரோ உள்பட பல ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் அவ்வப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இது ஐடி துறை ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எப்போது வேலை பறிபோகும்? என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஏஐ சார்ந்த விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். அப்போது தான் பணியில் நீடிக்க முடியும் என்று பலரும் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தான் Accenture ஐடி நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக படிப்படியாக இந்த பணி நீக்கம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக அக்சென்ச்சர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் மீட்டிங்கில் கூறியுள்ளதாவது: ‛‛நாம் நம் அனுபவத்தின் அடிப்படையில் மறுதிறன் அடிப்படையில் திறமையானவர்களிடம் இருந்து திறன்களை பெறுவது என்பது குறுகிய காலத்தில் சாத்தியமாகாது. இதனால் ஊழியர்கள் தங்களின் திறனை உடனடியாக வளர்த்து கொள்ள வேண்டும். ஏஐ-க்களை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ஊழியர்கள் தங்களின் திறமையை வளர்த்து கொள்ளவிட்டால் எதிர்காலத்தில் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்பதை மறைமுக வார்னிங்காக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஏஐ பயன்பாடு, ஊழியர்களின் திறன் மேம்பாட்டை அடிப்படையாக வைத்து அக்னெச்சர் நிறுவனம் திட்டத்தை வகுத்துள்ளது. குறிப்பாக ஏஐ-வை அதிகப்படியாக பணிக்கு பயன்படுத்தி அதனை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அக்சென்ச்சர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 69.7 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏஐ பயன்பாடு என்று நிறுவனம் நம்புகிறது. இதனால் ஏஐ - பயன்படுத்தி பணி செய்யும் வகையில் ஊழியர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications