தூது மேல் தூது விடும் பாஜக; அரசியலுக்கு வருகிறார் நடிகர் அர்ஜூன்? பின்னணி என்ன?
சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு பாஜகவில் இணையுமாறு அழைப்பு சென்ற நிலையில் ஆளை விடுங்க சாமி என்கிற ரீதியில் அவர் அமைதிகாத்து வருகிறாராம்.
நடிகர் அர்ஜூனை பாஜக தேர்வு செய்ததற்கு காரணம், தமிழகம், கர்நாடகம் என இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் என்பதே காரணமாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் இயல்பாகவே நடிகர் அர்ஜூன் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் என்பதாலும் ஆன்மிக நாட்டமிக்கவர் என்பதாலும் அவர் பாஜகவில் இணைய மறுப்பேதும் கூறமாட்டார் எனக் கணக்கு போட்டதாம் பாஜக.

பாஜக
பாரதிய ஜனதா கட்சியில் இணையும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, ஆர்.கே.சுரேஷ்குமார், ராதாரவி, கவுதமி, இயக்குநர் பேரரசு, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே பாஜகவில் இருக்கின்றன. இதில் அதிகமானோர் தமிழக பாஜக தலைவராக முருகன் இருந்தபோது இணைந்தவர்கள் என்று கூறலாம்.

வி.ஐ.பி.க்கள்
இந்நிலையில் அண்ணாமலை புதிய தலைவராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு கட்சி நிர்வாகிகளை உற்சாகம் கொள்ளச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதேவேளையில் மாற்றுக்கட்சி பிரமுகர்களையும், ஸ்டார் வேல்யூ முகங்களையும் கட்சியில் இணைக்கும் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்போது இந்த விவகாரத்தில் கவனத்தை திருப்பியிருக்கும் அண்ணாமலை பாஜகவில் பல வி.ஐ.பி.க்களை இணைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு காரணம்
அந்தவகையில் நடிகர் அர்ஜூனுக்கும் அழைப்பு சென்றதாகவும் ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் கிங்கை பாஜக தேர்வு செய்ததன் பின்னணியில் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது கர்நாடகம், தமிழகம் என இரண்டு மாநிலங்களிலும் அர்ஜுனுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த பரிச்சயம் இருப்பதால் அதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கேற்ப தேர்தல் நேர பிரச்சாரத்திற்கு கைகொடுக்கக் கூடும் என கணக்கு போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஞ்சநேயர் கோயில்
மேலும், நடிகர் அர்ஜூன் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் எளிதாக பாஜக கொள்கையோடு ஒத்திசைவார் என்று எதிர்பார்க்கப் பட்டிருக்கிறது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயிலை இவர் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அர்ஜூன் தொடர்பில் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications