போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் கிருஷ்ணா.. கிடுக்கிப்பிடி கேள்விகள்
சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகர் ஸ்ரீகாந்த் இன்னும் ஆஜராகவில்லை.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுடைய வங்கி பணப் பரிவர்த்தனை, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அடிப்படையில் கெவின் என்பவர் கைதானார். இவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த கானா நாட்டின் ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருள் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. செவ்வாய்கிழமையன்று ஆஜராக ஸ்ரீகாந்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக கடிதம் ஒன்றை அமலாக்கத்துறையிடம் நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர் மூலம் சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அழைக்கும் மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராவதாக ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு நடிகர் கிருஷ்ணா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார். காலை 10 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு கிருஷ்ணா பதில் அளித்துள்ளார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications