தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது?
சென்னை: தேமுதிக செய்தி தொடர்பாளராக இருந்த நடிகர் மீசை ராஜேந்திரன் இன்று அந்த கட்சியில் இருந்து விலகினார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நடிகர் மீசை ராஜேந்திரன் அதிமுகவில் சேர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் ரோல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மீசை ராஜேந்திரன். இவருக்கு சினிமா வாய்ப்பை வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த ரமணா திரைப்படத்தில் மீசை ராஜேந்திரனை நடிகராக அறிமுகம் செய்தார். அதன்பிறகு மீசை ராஜேந்திரன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
விஜயகாந்த் மீது அதிக விசுவாசத்துடன் வலம் வந்தார். மேலும் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். 2006 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் தேமுதிக சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
விஜயகாந்த் உடல்நலம் மோசமான பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா செயல்பட தொடங்கினார். அப்போதும் மீசை ராஜேந்திரன் கட்சி மாறாமல் தேமுதிகவில் பயணித்தார். தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக வலம் வந்தார். இந்நிலையில் தான் இன்று அவர் பிரேமலதாவிற்கு கடிதம் எழுதினார்.
அதில், கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் கூறியிருந்தார். இதன்மூலம் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிகழ்வு இன்று மதியம் தான் நடந்தது. இதையடுத்து இன்று மாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, மீசை ராஜேந்திரன் சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.
முன்னதாக தேமுதிகவில் இருந்து விலகியது பற்றி மீசை ராஜேந்திரன் கூறுகையில், ''நான் 31 ஆண்டுகளாக கேப்டன் (விஜயகாந்த்) மன்றத்தில் இருந்தேன். 21 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். விஜயகாந்த் உடன் விஸ்வாசமாக இருந்தேன். ஆனால் எனது விஸ்வாசத்துக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இதனால் அங்கிருந்து நான் விலகுகிறேன். கேப்டன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் எந்த வித மனவருத்தமும் எனக்கும் கிடையாது. கேப்டன் இல்லை என்றால் நான் இல்லை. சினிமா உள்பட அனைத்து இடங்களிலும் கேப்டன் தான் எனக்கு வாய்ப்பளித்தார். ஆனால் இப்போது அங்கு (தேமுதிக) இருக்கும் சூழ்நிலைகள் சரியில்லை. நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களால் சூழல் சரியில்லை. இதனால் நான் ராஜினாமா செய்வதாக கொடுத்துள்ளேன்'' என்று கூறியிருந்தார்.
அதாவது விஜயகாந்த் கட்சியை வழிநடத்தியபோது அவர் தனித்து போட்டியிட்டார். அதன்பிறகு அதிமுக கூட்டணியிலும், மக்கள் நல கூட்டணியிலும் போட்டியிட்டார். மாறாக திமுக கூட்டணியில் சேரவே இல்லை. ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக முதல் முறையாக இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா, 10 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டது.
இதில் ராஜ்யசபா எம்பியாக பிரேமலதாவின் தம்பி சுதீஷ் தேர்வாகி உள்ளார். 10 சட்டசபை தொகுதிகளில் விருத்தாச்சலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். மீசை ராஜேந்திரனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இப்படியான சூழலில் தான் நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களால் தேமுதிகவில் சூழல் சரியில்லை என்று கூறி மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications