குப்பையில் கிடந்த 45 பவுன்! அத்தனை கஷ்டத்திலும் ஆசைப்படாத "தங்கம்"! பத்மாவுக்கு பார்த்திபன் பாதபூஜை!
சென்னை: சாலையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவின் செயலை பாராட்டிய நடிகர் பார்த்திபன், அவருக்கு காலணி அணிவித்து பாத பூஜையை செய்து கவுரவப்படுத்திய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ்வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
எத்திராஜ் கல்லூரி
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன.

உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
அஞ்சல் ஸ்டாம்ப்
தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது.
இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்துள்ளார். இதுகுறித்து பத்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஜினி சாரை பார்த்தது மகிழ்ச்சி. அவர் வெளியே இருந்து பேசி அனுப்புவார் என நினைத்தேன். ஆனால் ஒரு குழந்தை போல் எங்களிடம் அன்பாக பேசினார்.
தங்கசங்கிலி
எங்களை உள்ளே அழைத்து உபசரித்தார். அவரை பார்ப்பேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னை அவரது மகள் போல் அணைத்துக் கொண்டார். எனது நேர்மையை பாராட்டி தங்க சங்கிலி அணிவித்தார் என பத்மா தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கவுரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
பத்மாவுக்கு பாராட்டுகள்
பல்வேறு இடங்களில் இருந்து பத்மாவுக்கு பாராட்டுகளும் நிதியுதவிகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்த் ரசிகர்களும் பத்மாவை அழைத்து பாராட்டி அவருக்கு ரூ 25 ஆயிரம் ரொக்கம் வழங்கி கவுரவித்தனர்.
என்னதான் குடும்பம் கஷ்டத்தில் இருந்தாலும் நேர்மையாக பத்மா செய்த காரியம் பலருக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்று காசுக்காக, பணத்திற்காக பெத்த தாய், தந்தையையே கொல்லும் இந்த காலத்தில் பத்மாவின் மனிதநேயம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications