விஜய், விஷால் அரசியல்? ரஜினியிடம் வந்து விழுந்த கேள்வி! சிரித்துக்கொண்டே அவர் சொன்ன பதில் இதுதான்
சென்னை: சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதேபோல நடிகர் விஷாலும் அரசியல் என்ட்ரி குறித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினி அளித்துள்ள பதில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
தமிழகத்தின் அரசியல் பெரும் புள்ளிகள் அனைவரும் கோடம்பாக்கம் வழியாக வந்தவர்களே. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தது நடிகராக இருந்ததுதான். இதே வழியில் விஜய்யும் வருவார் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த எதிர்பார்ப்பு கடந்த 2ம் தேதி நிறைவடைந்தது. நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், அதன் தலைவராக அவரே இருப்பதாகவும் அறிவித்திருந்தார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் அரசியல் பெரும் கவனம் பெற்றது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகம் வந்த நரேந்திர மோடி ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் மோடியின் புகழை ரஜினி பாட தொடங்கினார். இந்த சம்பவத்திற்கு அடுத்து அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு மிகுந்த தீவிரமடைந்தது. கடமையை செய்யுங்கள், போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றும், அரசியலில் இறங்குவது உறுதி என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பிறகு பாஜக சார்பு நிலையை எடுத்த ரஜினி, ஒரு கட்டத்தில் தடாலடியாக, “திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசன மாதிரி, எனக்கும் பாஜக வண்ணம், காவி வண்ணம் பூசப்பார்க்கறாங்க. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்” என அந்தர் பல்டி அடித்தார். அதன் பின்னர் மீன் குழம்பு, சர்க்கரை பொங்கல் என பேசி, 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பதாக கூறினார்.
மட்டுமல்லாது கட்சி தொடங்குவதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக தமிழருவிமணியன், அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டனர். இதனையடுத்து கட்சியின் சின்னம் ஆட்டோ என்று அரசல் புரசலாக செய்திகள் வெளியாகின. ஆனால் மறுபுறம் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியது. எனவே, கொரோனா தொற்று தாக்கும் அபாயம் இருப்பதால் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு அதில் ரசிகர்களும் மக்களும் என்னை மன்னியுங்கள் என்று ரசிகர்களுக்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்தார்.
இப்படியாக கடைசி வரை அரசியல் கட்சி தொடங்காததால் தொண்டர்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல நடிகர் விஷால், “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது” என்று மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விஜய்யின் அரசியல் என்ட்ரி, விஷாலின் விமர்சனம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, “சாரி பொலிட்டிக்கல் கேள்விகளை தவிர்த்திடுங்கள்” என்று கூறியுள்ளார். ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருந்த நடிகர் ரஜினி தற்போது அரசியல் கேள்விகளை தவிர்த்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications