உதயநிதி பற்றிய கேள்வி.. திடீரென டென்ஷனான நடிகர் ரஜினிகாந்த்! விரலை நீட்டி கூறிய வார்த்தை - ஆக்ரோஷம்
சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரே? என்பது பற்றிய கேள்வியால் நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென்று பத்திரிகையாளர்களிடம் டென்ஷனான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் ‛வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‛ஜெய்பீம்’ இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்பட பலர் நடித்துள்ளார்.

படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ‛மனசிலாயோ’ பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தான் லைகா நிறுவனம் சார்பில் ‛வேட்டையன்’ படத்துக்கான ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் ‛கூலி' திரைபபடத்தின் படப்பிடிப்புக்காக விஜயவாடா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்தை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச்க்கு யார் யார் வருகிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‛‛சரியாக எனக்கு தெரியாது’’ என்றார்.
அதேபோல் இன்னொரு பத்திரிகையாளர், ‛‛வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கும் சார்?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினிகாந்த், ‛‛நல்லா இருக்கும்'' என சிரித்தபடி கூறினார். முன்னதாக இந்த வேளையில், பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார். அதாவது, ‛‛உதயநிதி துணை முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறார்கள். அதுபற்றி என்ன நீங்க என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியை கேட்டவுடன் சிரித்தபடி இருந்த ரஜினிகாந்தின் முகம் முற்றிலுமாக மாறியது. அதுமட்டுமின்றி, கேள்வி கேட்ட பத்திரிகையாளரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ஆள்காட்டி விரலை உயர்த்தி, ‛‛அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என சொல்லியிருக்கிறேன்'' என டென்ஷனாக கூறிவிட்டு சென்றார்.
தற்போது தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் கூட இன்னும் சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் உதயநிதி பற்றிய கேள்வியால் டென்ஷனாகி உள்ளார். முன்னதாக கடந்த மாதம் 24ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருந்தார். அப்போது அவர், ‛‛என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்துள கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் அன்பு தம்பிஉதயநிதி ஸ்டாலின்’’ என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் துணை முதல்வர் ஆவது பற்றிய கேள்விக்கு டென்ஷனாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications