24ம் தேதி வரை மேனேஜர் பதவி இருக்காதா?.. பழைய வேலைக்கும் போக முடியாதா? யாரை சொல்கிறார் எஸ்.வி.சேகர்?
24 ஆம் தேதி பிரான்ஞ் மேனேஜர் பதவியும் காலியா.. என்ன சொல்கிறார் எஸ்.வி.சேகர் கருத்து
சென்னை: நீ வெறும் பிரான்ச் மேனேஜர் 24 ஆம் தேதி வரைக்கும் உன்னை அந்த வேலையில் வச்சிருப்பாங்களான்னே தெரியலை என எஸ்.வி.சேகர் பூடகமான ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார்.
தமிழகத்தில் பாஜக தலைவராக கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் கட்சியில் எந்தவித வளர்ச்சியையும் அவர் செய்யவில்லை என கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
முன்னாள் தலைவர்கள் இருந்த போது எத்தனையோ பேர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் வந்து இணைந்துள்ளார்கள். ஆனால் தற்போது பாஜகவிலிருந்து பலர் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் நிலை உள்ளது.

காயத்ரி ரகுராம்
மதுரை சரவணன், காயத்ரி ரகுராம், சிடிஆர் நிர்மல் குமார், திலீப் கண்ணன் உள்ளிட்டோர் அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர். அதிலும் காயத்ரியை விட நிர்மல் குமாரும், திலீப்பும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். 420 அண்ணாமலை என்றும் , தமிழகத்திற்கே சாபம் என்றும் திமுகவுடன் பேரம் பேசும் அண்ணாமலை என்றும் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

திலீப் கண்ணன்
அது போல் பாஜக ஐடி விங்கின் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன், கே டி ராகவன் உள்பட பல மூத்த தலைவர்கள் மீது பொய் புகார் கொடுத்து அவர்களை அண்ணாமலை ஓரங்கட்டினார். எந்த பெண்ணுமே புகார் கொடுக்காத நிலையில் டெல்லியில் நல்ல செல்வாக்கில் இருந்த கே டி ராகவனை காலி செய்தார், இவருடைய வார் ரூம் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ என திலீப் கண்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நிர்மல் குமார்
இந்த நிலையில் சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்துவிட்டார். இதுகுறித்து பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் கூட்டணியில் உள்ள அதிமுக இதை செய்திருக்கக் கூடாது. தமிழகத்தின் எதிர்காலம் பாஜகதான், அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக ஆட்சி அமைக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் அதிமுக முன்னேறுவது எப்படி, இனி கோட்டையை கைப்பற்றுவதை மறந்துவிட வேண்டியது என கடுமையாக விமர்சித்திருந்தார் அமர்பிரசாத்.

பாஜக மேனேஜர் அல்ல
இந்த நிலையில் அதிமுக- பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டதாக பேச்சுகள் எழுந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தமிழகத்திற்கு அண்ணாமலை தோசை சுடுவதற்கோ இட்லி சுடுவதற்கோ வரவில்லை. தமிழகத்தில் ஒரு தோசையை சுட்டுகிட்டு, இட்லியை சுட்டுக்கிட்டு, பாஜகவின் மேனேஜராக உட்கார்ந்து சீட்டை தேய்ச்சிகிட்டு அப்படியே சைட்ல போய்கிட்டு இருக்க வரலை, அண்ணாமலை இங்கு தலைவராக வந்திருக்கேன். தலைவராக இருப்பவன் தலைவராகத்தான் முடிவுகளை எடுப்பான் என கூறியிருந்தார்.

ராஜினாமா செய்வேன்
இந்த நிலையில் அண்ணாமலை நேற்றைய தினம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது அதிமுகவுடனான கூட்டணி வேண்டாம். அப்படி அமைந்தால் நான் என பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியிருந்தார். இது அதிமுக மட்டுமல்லாமல் பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஒரு பூடகமான ட்வீட்டை போட்டுள்ளார்.

எஸ்.வி.சேகர் பூடக ட்வீட்
அதில் அவர் கூறுகையில், தம்பி ஆபீஸ் போகலியா 🥸எதுத்த வீட்டு பையன் பக்கத்து வீட்டு பையன் ஆபீஸ் போறாங்களா? நானும் வீட்டுலயே வேலை செய்வேன்.
🥹அட மண்டு அவங்க கம்பெனி முதலாளி. நீ வெறும் பிரான்ச் மேனேஜர் 24 வரைக்கும் உன்னை வேலயில வச்சிருப்பாங்களான்னே தெரியலை. இனிமே பழைய வேலைக்கும் போகமுடியாது. கிளம்பு.. என கூறியிருக்கிறார். அதாவது யார் பெயரையும் குறிப்பிடாமல் போட்டுள்ள இந்த ட்வீட் அண்ணாமலையை குறிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்தான் நான் மேனேஜர் இல்லை என்றார், இதற்கு முன்பு பணியாற்றிய ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே அண்ணாமலையை எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications