"அதிமுகவின் 5 அதிசயத்திலும் இருப்பவர்".. எடப்பாடிக்கு நடிகர் தம்பி ராமையா ஆதரவு.. ஈபிஎஸ் ரியாக்ஷன்
சென்னை: 1972ல் தொடங்கப்பட்ட அதிமுகவில் 5 அதிசயங்கள் நடந்துள்ளது. இந்த 5 அதிசயங்களிலும் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. விவசாயி ஒருவர் நேர்மையோடும், ஒழுக்கத்தோடும், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் கட்சியின் தலைமை பீடத்துக்கு வர முடியும் என்று அடுத்த தலைமுறைக்கு உதாரணமாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என்று நடிகர் தம்பி ராமையா புகழ்ந்து பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரனின் 100வது பிறந்தநாளையொட்டில் சென்னையில் அதிமுக சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசினார். இதுதொடர்பாக தம்பி ராமையா கூறியதாவது:
ஒரு சாமானியன் கட்சிக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு பெண்ணின் பெருமை பேச ஒரு தாயின் புகழ் பேச இங்கே வந்துள்ளேன். 1972ல் அதிமுக உருவாக்கப்பட்டது. 52 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடுகிறது. இது ஒன்று. 30 ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறது. இதில் 5 அதிசயங்கள் நடந்துள்ளது. இந்த 5 அதிசயங்களில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சொல்கிறேன்.
அதிமுக 1972ல் தொடங்கி 52 ஆண்டு காலம் ஆகிறது. இந்த கட்சி சில்வர் ஜூபிளி வருடத்தை தாங்கியபோது எடப்பாடி முதலமைச்சர். இந்த இயக்கம் 50 ஆண்டை கடந்தபோதும் கட்சியின் தலைவர் எடப்பாடியார். ஜெயலலிதா 75வது பிறந்தநாள் கொண்டாடியபோதும் இந்த இயக்கத்தை வழிநடத்துகிற பொறுப்பில் எடப்பாடியார். எம்ஜிஆருக்கு 100வது பிறந்தநாள் கொண்டாடும்போதும் கட்சியின் தலைவராக எடப்பாடியார். இன்றைக்கு புரட்சி தலைவருக்கு பின்னால் இருந்து ஆளாக்கிய ஆளுமை ஜானகி அம்மையாருக்கு இன்று 100வது பிறந்தநாள் விழா. இன்றும் இயக்கத்தின் தலைவர் எடப்பாடியார்.
இந்த 5ம் எப்படி சாத்தியமானது? சில்வர் ஜூபிளி, கோல்டன் ஜூபிளி, டைமண்ட் ஜூபிளி, 100 ஆண்டு ஆளுமை கொண்ட தலைவர்கள். அப்போது நினைத்து கொண்டேன். ஒரு விஷயத்தில் தடுமாறாமல், தடம்மாறாமல் ஒற்றை தலைமை, ஒரு இயக்கம் என்று ஒன்றையே நேசித்தால் அவர்கள் உயர்த்தப்படுவார்கள். நான் கட்சிக்கு அப்பாற்பட்டு பேசுகிறேன். ஒரு விவசாயியின் மகன் என்ற முறையில் பேசுகிறேன்.
எப்படி இது சாத்தியமானது? நேற்று இரவு முழுவதும் யோசித்தேன். இன்னொரு அதிசயம் எடப்பாடியார் போல் யாருக்கு வந்தாலும் அதற்கு முன்மாதிரி இவர் தான். விவசாயி ஒருவர் நேர்மையோடும், ஒழுக்கத்தோடும், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் கட்சியின் தலைமை பீடத்துக்கு வர முடியும் என்று அடுத்த தலைமுறைக்கு பாடம் நடத்தி கொண்டு இருக்கும் ஒரு பாமர ஜாதியில் இருந்து வந்த எடப்பாடியாரை நான் வணங்குகிறேன். நன்றி அய்யா'' என்று புகழ்ந்தார்.












Click it and Unblock the Notifications