திட்டவட்டமாக மறுக்காத நடிகர் வடிவேலு.. அப்ப அதுதானா இது?.. லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளராக தாம் போட்டியிட இருப்பதாக பேசுகிறார்கள்.. அப்படி எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுக்காமல் பதில் தந்துள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கொடி கட்டிப் பறப்பவர் வைகை புயல் வடிவேலு. 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் பிரசாரம் செய்து பட்டையைக் கிளப்பியவர் வடிவேலு.

ஆனால் அறிவிக்கப்படாத வடிவேலுவின் அரசியல் பயணம், ஒட்டுமொத்த திரை உலகத்தில் இருந்தே அவரை ஒதுக்கி வைத்துவிட்டது. 10 ஆண்டு காலம் சினிமாவில் எந்த ஒரு படவாய்ப்பும் இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டார் வடிவேலு.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்த வடிவேலுவின் படங்களும் ஓடவில்லை. என்னதான் வடிவேலு படம் காமெடியாக இருந்தாலும் அவருக்கு யாரும் எண்ட் கார்டே போட முடியாது என்பதை ஆணித்தரமாக சொன்னது “மாமன்னன்” திரைப்படம். அத்திரைப்படத்தில் தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக அட்டகாசமாக நடித்து பெரும் மதிப்பும் மரியாதையையும் திரும்பப் பெற்றார் வடிவேலு.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார் வடிவேலு. அப்போது, கருணாநிதி சமாதி அல்ல.. சன்னதி என நெஞ்சுருகினார் வடிவேலு. பின்னர் திமுக பொதுக் கூட்ட மேடையிலும் மீண்டும் ஏறி பேசத் தொடங்கினார். இதனாலேயே லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளராக வடிவேலு களமிறங்கப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக வடிவேலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு திட்டவட்டமான மறுப்பை சொல்லாத வடிவேலு, கருணாநிதி நினைவிடம் போனேன்.. திமுக மேடையில் பேசினேன்.. அதனால் திமுக சார்பில் போட்டியிடுவதாக பேசுகிறார்கள்.. அப்படி எல்லாம் இல்லை என்பதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டார். நெருப்பில்லாமலா புகையும்?
திமுகவில் திரை உலக நடிகர்கள் காலந்தோறும் உச்சம் பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. டி.ராஜேந்தர், ராதாரவி, வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் என பெரும் பட்டாளமே திமுகவில் இருந்த காலமும் இருந்தது. இப்போதும் திரை உலகத்தினர் திமுகவில் இணைந்து பணியாற்றுகின்றனர். இதனால் வடிவேலுவை திமுக வேட்பாளராகவோ, பிரசார பீரங்கியாகவோ பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications