கண்ணு கலங்குது தளபதி! நடிகனாக விஜயின் கடைசி பிறந்தநாள்? ’நா’வில் தொடங்கி ’ஜ’வில் முடிந்த திரைப்பயணம்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஜனநாயகன் படத்தோடு தனது திரை வாழ்வை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். நள்ளிரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியான நிலையில், நடிகராக கடைசி பிறந்த நாளை கொண்டாடும் விஜயை பார்த்து கலங்கி வருகின்றனர் 'ரசிகர்கள்'.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஜனநாயகன் படத்தின் போது அரசியலுக்கு வந்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிகளையும் படுதோல்விகளையும் சந்தித்து இருந்தாலும் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் செல்வாக்கு விஜய்க்கு அதிக அளவில் இருக்கிறது. அந்த வகையில் தன்னிடம் இருக்கும் இளைஞர் படையை அரசியல்படுத்த வேண்டும் என திட்டமிட்ட விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

இந்த பிறந்தநாள் விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் என்றே சொல்லலாம். காரணம், அரசியல்வாதியாக அதுவும் முழு நேர அரசியல்வாதியாக தனது முதல் பிறந்த நாளை விஜய் கொண்டாடுகிறார். அதே நேரத்தில் விஜயின் 33 வருட திரைப்பயணம் ஜனநாயகன் படத்தோடு முடிவடைகிறது. அந்த வகையில் நடிகராக விஜயின் கடைசி பிறந்தநாள் இதுவாக கூட இருக்கலாம். இதற்கு பின்னர் விஜய் நடிப்பாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
நாளைய தீர்ப்பு தொடங்கி ஜனநாயகன் வரை விஜய் 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒல்லியான தேகம், கருத்த உடல் என பக்கத்து வீட்டு பிள்ளை போல படத்தில் அறிமுகமான விஜய் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியா? என்று விமர்சித்தது அன்று பிரபலமாக இருந்த ஒரு பத்திரிகை. அதே பத்திரிகை பின்னாளில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் விஜய் என கொண்டாடி தீர்த்தது. அந்த அளவுக்கு தன்னை விமர்சித்தவர்களை தன் திறமையால் வாய் அடைக்க வைத்தவர்.
வாரிசு நடிகர் என்ற விமர்சனம் வேறு. தந்தை எஸ்ஏ சந்திரசேகரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தனது திறமையால் தான் விஜய் இன்று இந்த உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. காரணம் பிரசாந்த், கார்த்திக், விக்ரம் பிரபு என பல வாரிசு நடிகர்கள் திரை உலகில் காணாமல் போய் இருக்கிறார்கள் அந்த வாரிசுகளின் வாரிசுகளும் திரையுலகில் மறைந்து போனதும் உண்டு.
விஜய்க்கு அப்படி இல்லை.. பல தோல்விகளை சந்தித்த போதும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கு உயர்ந்திருக்கிறார். பூவே உனக்காக கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சாக்லேட் பாயாக மாறினார், திருமலை படத்தை தொடர்ந்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தார். அரசியல் கருத்துக்களை அனல் தெரிவிக்க பேசுவது, ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பது என விஜய்க்கு நாளுக்கு நாள் ரசிகர் வட்டம் அதிகரித்துக் கொண்டே போனது.
பெண்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக விஜயை கொண்டாடினர். இளம் பெண்கள் தங்கள் அண்ணனாகவும் விஜயை கொண்டாடி தீர்த்தனர். இளைஞர்களை பற்றி சொல்ல வேண்டாம். அண்ணனாக, நண்பனாக, தற்போது தலைவனாக விஜயை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதோ இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் அப்டேட்டை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
நெருப்பு பின்னணியில் கையில் கத்தியோடு மாஸாக எண்ட்ரி கொடுக்கிறார் விஜய். இரவு 12 மணிக்கு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான போதும் நள்ளிரவு வரை கண்விழித்து காத்திருந்த ரசிகர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான கமெண்டுகள் இதுதான். நடிகனாக உங்கள் பிறந்தநாளை கொண்டாடும் கடைசி நாளாக இருக்குமோ! என கண் கலங்காத குறையாக பேசி வருகின்றனர். ஒவ்வொரு ரசிகனின் கமெண்டிலும் விஜயின் மீதான அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. 'நடிகனாக' இல்லாவிட்டாலும் 'ஜனநாயகனாக' ஜனநாயக நாட்டில் விஜய் வெற்றி பெற வாழ்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications