கட்சிக்காக உழைத்த அஜிதா ஐசியூவில்! தூத்துக்குடி போகாமல்.. ஆடியோ லாஞ்ச்சுக்கு மலேசியா புறப்பட்ட விஜய்
சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் விஜய் சென்னையிலிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றார். கட்சியில் பதவி கிடைக்காமல் அஜிதா என்பவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அது போல் கட்சி நிர்வாகி மிரட்டியதாக மற்றொரு கட்சி நிர்வாகியும் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் விஜய் மலேசியாவுக்கு சென்றுள்ளது அஜிதா ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படம் வரும் பொங்கல் பண்டிகையை குறித்து ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், இந்த படம்தான் கடைசி படம் என அறிவித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அது போல் ஒரு பேனரில் கிளைச் செயலாளரின் பெயர் போடவில்லை என்பதற்காக மற்றொரு நிர்வாகி தன்னை மிரட்டியதாக கூறி இன்னொரு நிர்வாகியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில் விஜய் மலேசியா சென்றுள்ளது வேதனை அளிப்பதாக அஜிதா ஆதரவாளர்கள தெரிவித்துள்ளனர். ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அஜிதாவை விஜய் வந்து சந்திப்பார் என அவரது ஆதரவாளர்கள் கருதியிருந்த நிலையில் விஜய், மலேசியா புறப்பட்டு சென்றது பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மலேசியா அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அரசியல் பேசக் கூடாது, தவெக கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்ந்த எந்த ஒரு அம்சமும் இடம்பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே, எனவே இதை அரசியல் மேடையாக்க கூடாது என படக்குழுவுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலைக் குறிப்பிடும் பேனர்கள், பொருட்கள், சின்னங்களை பயன்படுத்தக் கூடாது. பொது அமைதியையும் அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருள்களை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக கொடியில் அந்த இரு நிறங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த நிறத்தை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருப்பது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications