விஜய்க்கு பிடித்த வெற்றிலைப் பாயசம்! அதில் என்ன ஸ்பெஷல்?
சென்னை: நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் தடபுடலான சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் சில புதிய வகையான உணவுப் பொருட்கள் சில இடம்பெற்றிருந்தன. இதில் அனைவருக்கும் வழங்கப்பட்ட வெற்றிலைப் பாயசம்தான் விஜய்க்கு அதிகம் பிடித்தது என்று இதற்குச் சமையல் பொறுப்பை ஏற்றிருந்தவர் கூறியுள்ளார்.
பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளைத் தொகுதி வாரியாக கண்டறிந்து அவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிவருகிறார் தவெக தலைவர் விஜய். இதற்கான இரண்டாம் கட்டமாக விழா நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

அப்போது பேசிய விஜய், "நீட் தேர்வு முறையால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே, அது கூடாது. இந்தத் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன வழி, கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். முன்பு மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அதை மாற்றிவிட்டார்கள்.
இதற்கு தீர்வு ஏற்படுபவரைச் சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்க வேண்டும். அதன் மூலம் முழு சுதந்திரம் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு மதிய உணவு தடபுடலாக வழங்கப்பட்டது. இதற்காக ஸ்பெஷாக உணவுகள் தயாரிக்கப்பட்டன. புதுச்சேரியிலிருந்து சமையல் செய்வதற்காக ஒரு குழு வந்திருந்தது. அந்த கேட்ரிங் முதலாளி, ரவி பிரபு சமையல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர், "விஜய் கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மகள் கல்யாணம் புதுச்சேரியில் நடந்தது. அதற்கு விஜய் வந்திருந்தார். அவருக்கு எங்கள் சமையல் பிடித்துப் போனது. அப்போது ஏற்பட்ட அறிமுகம்.

அதை வைத்து சென்னையில் நடைபெற்ற விழாவுக்குச் சமைக்க வாய்ப்பு கொடுத்தார். போன வருடம் நடந்த நிகழ்ச்சிக்கும் நார்கள்தான் சமையல் செய்தோம். கடந்த 28 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை மாணவர்களுக்கும் நாங்கள்தான் சமையல். இப்படித் தொடர்ந்து நாங்கள் நடிகர் விஜய் நிகழ்ச்சிகளுக்குச் சமையல் செய்து வருகிறோம்.
நேற்று நடந்த விழாவுக்கு மொத்தம் 4 ஆயிரம் பேருக்குச் சமைத்தோம். போனமுறை என்னென்ன சமைத்தோமோ அதேதான் இந்த முறையும் சமைத்தோம். மாற்றம் எதுவும் இல்லை. 25 கிலோ அரிசி மூட்டையில் 25 மூட்டை வாங்கினோம். இரவு முழுக்க இனிப்பு வகைகளைச் செய்தோம். விடியல் காலை 4 மணிக்கு தொடங்கி மதிய சாப்பாட்டுக்குத் தேவையான உணவுகளைச் சமைக்க ஆரம்பித்தோம். அது மதிய சாப்பாட்டுக்குச் சரியாக இருந்தது.
நாங்கள் மட்டும் 250 பேர் சமையல் ஆட்கள் வந்திருந்தோம். அதில் 200 பேர் உணவு பரிமாறும் வேலை செய்தார்கள். 50 பேர் சமையல் செய்ய இருந்தார்கள். அது போக எங்கள் சமையல் வேலைகளுக்கு உதவியாக விஜய் கட்சியினர் 50 பேர் இருந்தனர். அவர்களின் உதவியால் வேலைகள் இன்னும் சீக்கிரமாகச் செய்ய முடிந்தது.
மலாய் சான்விச் ஸ்வீட், ஆக்ராபான் ஸ்வீட், இஞ்சிப் புளித் துவையல், மாங்காய் ஊறுகாய், அவரைக்காய் மல்லாட்டை பொரியல், உருளைக்கிழங்கு பட்டாணி காரக்கறி, அவியல், கூட்டு, வெங்காயம் மல்லாட்டை பகோடா, பருப்புப் பொடி சாதம், விஜிடபுள் பிரியாணி, எண்ணெய்க் கத்திரிக்காய் வத்தக் குழம்பு, மாங்காய் மற்றும் முருங்கைக்காய் போட்டு சாம்பார், தக்காளி ரசம், வெங்காய வடை, அப்பளம், வெற்றிலை பாயசம், மோர் எனத் தடபுடலாகச் சமைத்துக் கொடுத்தோம்.

முதலில் என்ன செய்யலாம் என புஸ்ஸி ஆனந்த் எங்களிடம் மெனு கேட்டார். அவரும் சில மெனு கொடுத்தார். கடைசியில் விஜய் என்ன சமைக்கலாம் என்பதைச் சொன்னார். அதன்பிறகுதான் இந்த ஐட்டங்களை சமைத்தோம்.
இங்கு சமைத்ததிலேயே வெற்றிலைப் பாயசம்தான் ஸ்பெஷலான ஐட்டம். அதை எப்படிச் செய்வது என்று கேட்ரிங் உரிமையாளர் ரவி விளக்கி இருக்கிறார். அதாவது ஆயிரம் பேருக்கு இந்தப் பாயசத்தைச் செய்ய வேண்டும் என்றால், ஒரு கிலோ பாதம் பிசினியை ஊற வைக்க வேண்டும். அதனுடன் பாதம், முந்திரி, பிஸ்தா இவை மூன்றையும் அரைத்து 100 லிட்டர் பாலில் அதைக் கலக்க வேண்டும்.
அத்துடன் 10 கவுளி வெற்றிலையை அப்படியே அரைத்து அதன் சாற்றை எடுத்து இதில் கலந்துவிட வேண்டும். அதன்பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய், உப்பு எல்லாம் தேவையான அளவு போடவேண்டும். இந்தக் கலவையை அப்படியே வைத்து அடுப்பில் நன்றாகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். அதற்குப் பெயர்தான் வெற்றிலைப் பாயசம்.
சமைத்து முடித்த பிறகு நன்றாக ஆறிய பிறகு அதை ஜில் என்று ஐஸ் இல் வைத்துக் குளிரவைக்க வேண்டும். அப்படிக் குடித்தால் சுவைக் கூடுதலாகக் கிடைக்கும். இந்தப் பாயசத்தை விஜய் விரும்பி சாப்பிட்டார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications