விஜய்க்கு தொண்டர்களே இல்லை.. ரொம்ப தூரம் வரணும் தம்பி: அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி பேட்டி
சென்னை: "நடிகர் விஜய் தற்போது தான் கட்சி தொடங்கி உள்ளார். விஜய்யுடன் இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்களே தவிர தொண்டர்கள் இல்லை." என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி என்பது தவறான தகவல் என இன்று தவெக விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டந்தொறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் அதிமுகவினரின் பணிகளை இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "அரசு பணத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது தந்தைக்கு விழா எடுத்து வருகிறார். மேலும் தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டி, அவருடைய பெயரை வைத்து வருகிறார். தந்தையின் நினைவிடத்தில் பல நூறு கோடி செலவு செய்து விழா எடுத்தார். பல இடங்களில் கட்டிடம் கட்டி, அவரது தந்தையின் உருவச் சிலையை வைத்து விழா எடுத்து வருகிறார். இப்படிதான் அரசு பணம், மக்களின் வரிப்பணம் விரயமாகிறது.
எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். அவசரமாக செல்ல வேண்டிருந்ததால், ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி என கூறிவிட்டு சென்றார். ஆனால், பாஜகவுடன் கூட்டு என ஊடகங்கள் கூறி வருகின்றன. இதனை பெரிதுப்படுத்தி சிறுபான்மை வாக்குகளை வாங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முயற்சி செய்கின்றனர். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என மறுநாள் கடுமையாக சொல்லிவிட்டார்.
உதயநிதிக்கு தகுதி இல்லை: திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது பொறுப்புக்கு ஏற்றவாறு தகுதியாக பேசவில்லை. ரெய்டு வந்தவுடன் பாஜகவுடன் கூட்டணி என்று எடப்பாடி சொல்லிவிட்டார், மீண்டும் ரெய்டு வந்தால், பாஜகவுடன் கட்சியை இணைத்துவிடுவார் என பேசி உள்ளார். மேலும் 80 ஆண்டு காலம் உழைத்த தனது தாத்தாவின் பெயரை ஏன் வைக்கக்கூடாது? என்கிறார். 80 ஆண்டு காலம் உழைத்த நீங்கள், அன்றாடங்காய்ச்சியாக சென்னைக்கு வந்த கருணாநிதி குடும்பத்தினர், எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறீர்கள்?
அதிமுக தலைவரை பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அறுகதை கிடையாது. சாதாரண நிலையில் இருந்து உழைத்து, தொண்டர்களுடன் இணைந்து செயலாற்றி பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திமுகவில் கருணாநிதி உழைத்தார். அவரது மகன் மு.க.ஸ்டாலின், பேரன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாரிசு என்பதால் பதவி வழங்கப்பட்டது. கருணாநிதிக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் துரைமுருகன் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்? உழைத்து பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.
விஜய்க்கு தொண்டர்கள் இல்லை: மேலும் பேசிய கே.பி.முனுசாமி, "நடிகர் விஜய் தற்போது தான் கட்சி தொடங்கி உள்ளார். விஜய்யுடன் இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்களே தவிர தொண்டர்கள் இல்லை. அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இன்னும் நீண்ட தூரம் அவர் அரசியலில் பயணிக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் ரீதியாக தலைவர் என்ற அங்கீகாரத்தை பெற முடியும். தற்போது கட்சி தொடங்கியுள்ளதை வாழ்த்துவோம்.
மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் நோக்கத்திலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொல்லி இருக்கிறார். தேர்தல் களத்தில் அதிமுக 2 கோடி தொண்டர்களை நம்பி தேர்தலில் போட்டியிடும் கட்சி. தேர்தல் நெருங்க நெருங்க உணர்வோடு உள்ளவர்கள் வருவார்கள். தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும்" எனத் தெரிவித்தார்.
அதிமுக - தவெக கூட்டணி?: அண்மையில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய விஜய், பாஜக, திமுகவை தாக்கிப் பேசியிருந்தார். ஆனால், அதிமுகவை சீண்டவில்லை. எனவே 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, தவெக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரத்தன. இந்தச் சூழலில் இன்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இந்த தகவல் தவறானது என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications