நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? மாணவர்கள் சாதிக்க நிறைய இருக்கு.. கல்வி விழாவில் விஜய் அட்வைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த 2 ஆண்டுகளாக கவுரவித்து வருகிறார். இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடந்து வருகிறது.
இதில் 88 தொகுதிகளில் உள்ள 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.. மை டியர் யங் லீடர்ஸ் என்று பேச்சை தொடங்கினார். தொடர்ந்து, மாணவர்களையும், பெற்றோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பொதுத்தேர்வில் சாதித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. படிப்பில் சாதிக்க வேண்டும் தான்..

விஜய் பேச்சு
அதற்காக ஒரேயொரு தேர்வில் சாதிக்க வேண்டும் என்பது சாதனை அல்ல. ஒரு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். ஏனென்றால், நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. மனதையும், சிந்தனையையும் தைரியமாகவும், ஜனநாயகனாகமாகவும் வைத்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
ஜனநாயக கடமை
ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால் தான், இந்த உலகம் சுதந்திரமாக இயங்க முடியும். ஜனநாயகம் என்பது முறையாக இருந்தால், எல்லோருக்கும் எல்லாம் சரிசமமாக கிடைக்கும். அதற்கான முதல் படியால வீட்டில் உள்ள பெற்றோரிடம், அவங்கவங்கள் ஜனநாயக கடமையை சரியாக சொல்ல வலியுறுத்துங்கள். ஜனநாயக கடமையை சரியாக செய்வதென்றால், இதுவரை ஊழல் செய்யாதவர்கள் யாரென்று பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அவ்வளவுதான்.
கொள்ளையடித்த பணம்
பணம் கொடுத்து தேர்தலில் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களே.. அதனை யாரும் பாராட்ட கூடாது, பணம் வாங்கக் கூடாது என்று முன்பே சொல்லி இருந்தேன். அதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். அடுத்த ஆண்டு வண்டி வண்டியா கொண்டு வந்து பணத்தை கொட்ட போகிறார்கள். அவை அனைத்தும் உங்களிடம் கொள்ளையடித்த பணம்தான்.
பெற்றோருக்கு அட்வைஸ்
என்ன செய்யப் போகிறீர்கள்.. என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கும் தெரியும்.. நான் சொல்லி புரிய வேண்டும் என்பதல்ல.. அதேபோல் பெற்றோர் அனைவரும் குழந்தைகளுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை அறிந்து வழிநடத்துங்கள். எத்தனை தடைகள் வந்தாலும், அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதித்து காட்டுவார்கள்.
சாதி, மத சிந்தனை
அதேபோல் சாதி, மதம் வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் சென்றுவிட கூடாது. விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா பொருட்களை விளைய வைக்கிறார்கள்.. போதைப்பொருட்களை ஒதுக்கி வைப்பது போல் சாதி மதங்களை தூரமாக ஒதுக்கி வைப்பதே நல்லது. பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். சிவில் சர்வீஸ் தேர்வில் கூட பெரியாருக்கு சாதி சாயம் பூசுவதை போல் கேள்வி கேட்டுள்ளார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications