பாஜகவின் C டீம்தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்.. அமைச்சர் ரகுபதி கடும் அட்டாக்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் C டீம்தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்; நடிகர் விஜய் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல.. சினிமா மாநாடுதான் என தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.மேலும் அதிமுக தொண்டர்களை நடிகர் விஜய் இழுக்க நினைப்பதால், அக்கட்சியை விமர்சிக்கவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
அமைச்சர் ரகுபதி பதில்: திமுகவின் திராவிட மாடல் அரசை சாடியிருந்த நடிகர் விஜய், திமுகவினரை ஊழல்வாதிகள் என்றும் தங்களது அரசியல் எதிரி என்றும் அறிவித்திருந்தார். விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதற்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதில்: திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகளை தமிழக மக்களிடத்தில் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்றைய தினம் நடிகர் விஜய் வெளியிட்ட ஜெராக்ஸ் காப்பியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். எங்களுடைய சில கொள்கைகளுக்கு விஜய் விளக்கம் கொடுத்திருக்கிறார் அவ்வளவுதான். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் இருந்து யாரும் எடுத்துவிட முடியாது.

முதல்வர் ஸ்டாலின்: உழைப்புக்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உலகமே பாராட்டுகிறது.. உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் அவருக்கு என தனி இடம் இருக்கிறது. உழைப்பின் மற்றொரு வடிவமாக இருப்பவர்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் தமிழக மக்களிடத்திலேயே மரியாதை உண்டு.
பாஜக சி டீம்: இதுவரைக்கும் பல அரசியல் கட்சிகளை ஏ டீம் பி டீமாக பார்த்திருக்கிறோம். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது பாரதிய ஜனதாவின் சி (C) டீம்.
ஆளுநர் எதிர்ப்பு பேச்சு: ஆளுநரை எதிர்த்துப் பேசினால்தான் தமிழ்நாட்டில் எடுபடும். தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் ஒருவரை புகழ்ந்து பேசினால் அது எடுபடாது. ஆளுநரை எதிர்த்து பேசினால் அவருக்கும் கொஞ்சம் மரியாதை கிடைக்கும் என்பதால் பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.. முழுமையாக நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியின் A டீம், B டீம் அல்ல C டீம்தான். நடிகர் விஜய் தாம் யாருடைய A டீம் அல்ல, B டீம் அல்ல. என்றார். ஏனெனில் அவருக்குதான் தெரியும் தாம் பாஜகவின் C டீம் என்பது. எனவே அது பாஜகவின் C டீம்தான்.
ஆட்சிக்கு முதலில் வரட்டும்: ஆட்சியில் பங்கு தருவோம் என விஜய் பேசியிருக்கிறார். முதலில் ஆட்சிக்கு அவர் வரட்டும்.. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.. மக்களை சந்திக்க வேண்டும்.. 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.. வேட்பாளர்களை நியமிக்க வேண்டும். மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற வேண்டும்; பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு பிறகுதான் அதிகாரத்தில் பங்கு என்பது எல்லாம்.
கூட்டணியை பிரிக்க முடியாது: எங்களுடைய திமுக கூட்டணியை யாரும் பிரித்துவிட முடியாது. முதல்வர் ஸ்டாலினிடம் வைத்திருக்கும் பாசத்தால் யாரும் எங்களைவிட்டு போய்விடமாட்டார்கள்.
அண்ணா திமுகவுக்கு குறி: அண்ணா திமுக கட்சி, தமிழ்நாட்டில் எடுபடாது என்பது நடிகர் விஜய்க்கு தெரிந்திருக்கிறது. எனவே அதிமுக தொண்டர்களை இழுப்பதுதான் அவரது குறிக்கோள். பாரதிய ஜனதா கட்சிக்கு வலுவூட்டும் வகையில் அண்ணா திமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அந்த கட்சியைப் பற்றி அவர் பேசவில்லை. ஊழலைப் பற்றி பேச வேண்டும் என்றால் 2011-2021 அதிமுக ஆட்சிக்காலம் பற்றிதான் பேச வேண்டும். 2021-2026-ல் இருக்கும் திமுக அரசை பற்றி பேசுவதற்கு யாராலும் முடியாது; நாங்கள் எந்த தவறுக்கும் இடமும் தரவில்லை.
திமுக பழுத்தமரம்: திமுக பழுத்தமரம்.. அதில்தான் கல்லடிபடும். திமுகவை தாக்கிப் பேசினால்தான் மக்கள் மன்றத்தில் எதையாவது பேச முடியும். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினை மீறி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்யவும் முடியாது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.












Click it and Unblock the Notifications