ஓபிஎஸ்ஸை அரவணைத்து ஆறுதல் தந்த ஸ்டாலின்.. இப்படித்தாங்க இருக்கணும்.. பாராட்டிய விஜய்சேதுபதி!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் பிஸியாக இருக்கும் நிலையிலும் அவ்வப்போது அரசியல் குறித்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வாரம் ஒரு படம் என்று வரிசையாக படங்களை எடுத்து வெளியிட்டு வந்தாலும் கூட இடைப்பட்ட நேரத்தில் பொது பிரச்சனைகள் குறித்தும், அரசியல் நிலவரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். நடிப்பது என்பது மட்டுமின்றி நடிகர் சூர்யா, விஜய் போல பொது மக்கள் பிரச்சனைகளில் பல முறை விஜய் சேதுபதி துணிச்சலாக பேசி இருக்கிறார்.
முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நான்கு மாத தமிழ்நாடு அரசை விஜய் சேதுபதி பல இடங்களில் பாராட்டி பேசினார். ஆட்சி மிகவும் நன்றாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அரசியல் களம் நன்றாக மாறி உள்ளதாகவும் பாராட்டி பேசினார்.

பேட்டி
கடந்த சில வாரங்களுக்கு முன் பேட்டி ஒன்றில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். ரொம்ப நன்றாக பணியாற்றுகிறார். அவரை நேரில் சந்தித்தேன்.ரொம்ப சிறப்பாக இருக்கிறது சார் என்று நேரிலேயே சொல்லிவிட்டேன். நான் மட்டுமில்லை என்னுடன் இருப்பவர்களிடமும் கேட்டேன். என் நண்பர்களிடம் கேட்டேன்.என்னை சுற்றி உள்ளவர்கள், என்னுடன் வேலை பார்ப்பவர்கள். என்னுடைய டிரைவர் ஆகியோரிடம் கேட்டேன். எல்லோரும் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். யாரும் குறை சொல்லவில்லை என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

இன்னொரு பேட்டி
இந்த நிலையில்தான் இன்னொரு பேட்டி ஒன்றில், தமிழ்நாடு சட்டசபையில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. எனக்கு பிடித்து இருக்கிறது. முதல்வர் நன்றாக பேசுகிறார். எல்லோரும் நன்றாக ஆட்சி உள்ளது என்று பேசுகிறார்கள். அம்மா உணவகத்தை அடித்து உடைத்த போது உடனே அவர்கள் மீது ஆக்சன் எடுத்தது எல்லாம் பாராட்ட கூடிய விஷயம். இப்படி எல்லாம் பார்த்தது கிடையாது. சட்டசபை நிகழ்வுகளை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

ஓபிஎஸ்
இந்த நிலையில்தான் இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், விஜய் சேதுபதியிடம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் புகைப்படத்தை காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சமி மறைவை அடுத்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். ஓபிஎஸ்சை அணைத்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொன்னார்.
Recommended Video

பாராட்டு
இந்த புகைப்படத்தை பார்த்து விஜய் சேதுபதி தற்போது பாராட்டி உள்ளார். இப்படித்தான் அரசியல் கடந்து செயல்பட வேண்டும். இப்படித்தாங்க இருக்கணும். துக்கத்தில் சேர்வது, துணையாக இருப்பது நல்ல விஷயம். கஷ்டமான நேரங்களில் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருப்பது முக்கியம். இந்த புகைப்படம் பாராட்ட கூடிய ஒன்று என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டு உள்ளார். அடுத்தடுத்து பல்வேறு பேட்டிகளில் தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications