"சிவாஜி" பாணி 'தமிழ் முழக்கம்' + "சீமான்" தமிழ்த் தேசியம்.. எங்கே செல்லும் நடிகர் விஜய் கட்சி பாதை?
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாக்கு வங்கியையும் மட்டுமல்ல.. தற்போது சீமான் உரத்து முழங்கி வரும் சோ கால்ட் 'தமிழ்த் தேசிய' அடையாளத்தையும் கபளீகரம் செய்யப் போகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் என்பதையே அவரது கட்சி கொடியும் பாடலும் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் தமிழ், தமிழர் அடையாளம், தமிழர் பெருமிதங்கள், தமிழர் உரிமைப் போராட்டங்கள், தமிழ் மொழி காக்க உயிர்த் தியாகங்கள், தமிழ்நாட்டை உள்ளடக்கிய தனி திராவிட நாடு என்ற கொள்கை முழக்கத்துடன் ஆர்ப்பரித்து பேரலையாக கால்பதித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), உலகத் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கிற போராடுகிற கட்சியாக சர்வபரி தியாகங்களையும் எதிர் கொள்கிற கட்சியாக களத்தில் நின்றது திமுக. வாக்கு வங்கி அரசியலில் இருந்தாலும் கூட்டாட்சி கொள்கையை வலியுறுத்துகிற போராட்டங்களை மத்திய அரசுக்கு எதிரான ஆக்ரோஷமான நிலைப்பாடுகளை திமுகதான் காலந்தோறும் தன்வசம் வைத்திருக்கிறது. இப்போதையை திமுகவும் அதன் நீட்சியாகவே வெவ்வேறு கோணங்களில் தம்மை வெளிப்படுத்துகிறது.

அண்ணா திமுக: திமுகவில் இருந்து பிரிந்து உருவான அண்ணா திமுக பெயரளவிலான திமுகவைப் போன்ற "தோற்றம்" கொண்ட கட்சியாகவே இருந்ததே தவிர, மேலே சொன்ன அம்சங்களில் அதீதமான நிலைப்பாட்டை காட்டியது இல்லை. திமுகவில் இருந்து பிரிந்த மதிமுக திமுகவை விட அத்தனை கொள்கைகளிலும் அதிவேகம் காட்டிய போதிலும் அரசியல் நிலைப்பாடுகளால் அந்த கட்சி 'தாக்கம்' செலுத்த முடியாததாகிவிட்டது. பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகளின் போக்குகள் வெவ்வேறானவை.
சிவாஜி கணேசனின் தமிழ் அடையாள கட்சி: பாமக, விசிக உருவாவதற்கு முன்னர் 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற பெயரில் ஆகச் சிறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு கட்சியைத் தொடங்கினார். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சிவாஜி கணேசனின் தமிழ்த் தேசிய முன்னணியை கலைக்க வைத்துவிட்டனர் தமிழக வாக்காளர்கள். இத்தனைக்கும் சிவாஜிக்கு இல்லாத ரசிகர் பட்டாளமா? ஆனால் அரசியலில் ஜொலிக்கலையேப்பா... என்ன செய்வது?
விஜயகாந்த் கட்சி: இந்த தமிழ்நாட்டு அரசியலின் பின்னணியில் அதாவது கொள்கை, கோட்பாடுகள் பேசிய தமிழ்நாட்டு அரசியலில் கொள்கையாவது கோட்பாடாவது- தேசியமாவது, தமிழ்த் தேசியமாவது என குழப்பி அடித்து ரசிகர்களை வாக்கு வங்கிக்கு மடைமாற்றிய 'பெருமைக்குரியவர்' நடிகர் விஜயகாந்த். அவரது தேமுதிக கட்சி தொடக்கத்தில் எழுச்சி கண்டபோதும் அடிப்படையான கொள்கை கோட்பாடு இல்லாமல் போனதால் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது.
சீமான் நாம் தமிழர் கட்சி: இதன் பின்னர் திரைப்பட இயக்குநர் சீமான், ஈழத் தமிழரை மையமாகவே வைத்து நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறார். சீமான் பேசுகிற 'தமிழ்த் தேசியம்' உண்மையானதா? சாத்தியத்துக்குரியதா? என்பதையெல்லாம் அலசி ஆராயாமல் ஒரு பகுதி இளைஞர்கள் ரசிக்கின்றனர். சில இடங்களில் ஆதரவு இருக்கிறது. ஆனால் ஓட்டு அரசியலில் 'வெற்றி'தான் முக்கியமே தவிர 'கெத்து' காண்பிப்பதும் பெருமிதம் பேசிக் கொண்டிருப்பதும் அல்ல என்பதை சீமான் கட்சி இன்னமும் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை.
தமிழ்த் தேசிய அடையாளமும் விஜய் கட்சியும்: விஜயகாந்த், சீமான் வரிசையில் இப்போது நடிகர் விஜய் அரசியல் களத்துக்கு வந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தொடங்கி தற்போது கட்சியின் கொடி, பாடல் அனைத்திலும் திராவிடம் ப்ளஸ் தமிழ்த் தேசிய வாடையை தூக்கலாகவே முன்வைத்துள்ளார் நடிகர் விஜய். திராவிடத்தின் சமூக நீதி, தமிழ்- தமிழர் பெருமிதம் எல்லாவற்றையும் தன்வயப்படுத்த முயற்சிக்கிறார் நடிகர் விஜய். இன்று அறிமுகப்படுத்திய கொடி கூட சிவப்பு மஞ்சள் நிறத்தில்தான் உள்ளது. இது விடுதலைப் புலிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியைப் போன்றதுதான். அதேபோல தமிழர் பெருமிதத்தைக் குறிக்கும் வகையில் போர் யானைகள், வாகை மலர் ஆகியவற்றையும் கட்சி கொடியில் இடம் பெற வைத்திருக்கிறார் விஜய்.
விசில் பறக்கும்.. ஓட்டு?: தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது என்பதும் தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கொண்டதுதான். இந்த பாடல் நிச்சயம் விஜய் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கும்; கொண்டாட வைக்கும்.. குறிப்பாக விசில் பறக்க வைக்கும். இவர்களில் முக்கால்வாசிப் பேர் இன்னமும் ஓட்டுப் போடும் வயதுக்குரியவர்களாக இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
என்னவாகும் விஜய் கட்சி?: நடிகர் விஜய்யின் சீமான் சாயல் தமிழ்த் தேசிய அடையாள பயணம் என்பது சீமானுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்குகளைக் கூட கபளீகரம் செய்யக் கூடியதாகத்தான் இருக்கும். நிச்சயம் சீமான் கட்சிக்கு குடைச்சல்தரக் கூடியதாகவே இருக்கும். ஆனாலும் அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக எங்கள் கொள்கை இதுதான்; இன்ன கோட்பாட்டுக்காக பேசுகிறவர்கள் - திராவிட சித்தாந்தம் அல்லது திராவிடத்தை எதிர்க்கிற தமிழ்த் தேசியம் அல்லது திராவிடத்தை உள்வாங்கிய தமிழ்த் தேசியம்- மாநில உரிமைக்கான கட்சி நாங்கள் என திட்டவட்டமான வலுவான 'குரலை' வெளிப்படுத்தக் கூடிய சாத்தியங்களை நடிகர் விஜய் கட்சி கொண்டிருக்கிறதா? என்பது கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லாமல்தான் இருக்கிறது என்பதுதான் அதன் எதிர்காலம் என்னவாக போகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications